மதுபானத்தை அதிகம் அருந்தினால் அது உடலுக்குக் கேடு விளைவிக்கும் என்று நமக்குத் தெரிந்ததே. அளவோடு அருந்தவேண்டும் என்று சிலர் அறிவுரை வழங்குவதை நாம் கேட்டிருக்கலாம். சிறிதளவு மதுபானம் உடலுக்கு நல்லது என்றுகூட சிலர் கூறியதுண்டு.
ஆனால், அதுகூட நல்லதன்று என்று அண்மைய ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. தினமும் ஒன்று அல்லது இரண்டு குவளைகள் அளவு ஒயின் குடிப்பதுகூட நல்லதில்லை என்கின்றனர் ஆய்வாளர்கள்.
அமெரிக்காவில் 2015லிருந்து 2019ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் அதிகம் மதுபானம் அருந்தியதால் மாண்டோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு சுமார் 140,000ஆகப் பதிவானது. அவர்களில் பெரும்பாலோர் மதுபானத்தால் வரக்கூடிய கல்லீரல் நோய், புற்றுநோய், இதய நோய் உள்ளிட்டவற்றுக்கு ஆளானவர்கள்.
அதிகமாக மதுபானம் உட்கொண்டால் மட்டுமே இந்நிலை உருவாகும் என்று அர்த்தம் இல்லை என்று எச்சரிக்கின்றனர் ஆய்வாளர்கள்.
ஒரு வாரத்தில் திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை அறவே மதுபானம் உட்கொள்ளாமல் வார இறுதியில் இரவில் இரண்டிலிருந்து மூன்று குவளைகள் மதுபானம் அருந்துவதும் அளவுக்கு அதிகம்தான் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
'ரெட் ஒயின்' போன்ற சில மதுபான வகைகள் உடலுக்கு நல்லது என்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால் அது உண்மையல்ல என்பதை அண்மையில் நடத்தப்பட்ட பல ஆய்வுகளின் முடிவுகள் நிரூபிப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுகின்றனர்.
குறைந்த அளவில் மதுபானம் அருந்தும் பலரிடையே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவிடும் சில நல்ல பழக்க வழக்கங்கள் இருப்பதுண்டு. அதிலிருந்து தவறான கருத்துகள் எழுந்ததாகச் சொல்லப்படுகிறது. சிறிதளவு மதுபானம் அருந்தும்போதும் உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கான அபாயம் அதிகரிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

