நம் தாய்மொழியான தமிழ்மொழியை சிங்கப்பூரின் அதிகாரத்துவ மொழிகளில் ஒன்றாக ஆக்கியதற்கு சிங்கப்பூரின் முதல் பிரதமர் அமரர் திரு லீ குவான் இயூவை ஒவ்வொரு தமிழரும் நன்றி உணர்வோடு நினைத்துப் பார்க்க வேண்டும் என்று நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினர் இரா. தினகரன் கூறியிருக்கிறார்.
சென்னையில் நடைபெற்ற இரண்டு நாள் அயலகத் தமிழர் தினத்தின் இரண்டாம் நாள் நிகழ்வில் அவர் இவ்வாறு கூறினார். சிங்கப்பூரின் கல்விக் கூடங்களில் தமிழ் கற்பிக்கப்படுவதாகவும் அடுத்த தலைமுறையினரைத் தமிழ்மொழியைத் தொடர்ந்து பேசவைக்கப் பல்வேறு நடவடிக்கைகளை சிங்கப்பூர் அரசாங்கம் எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். அயலகத் தமிழர் தினம் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த திரு தினகரன், காலையில் சிறப்புரை ஆற்றிய தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவித்த நான்கு திட்டங்களை வரவேற்றுப் பாராட்டுவதாகவும் குறிப்பிட்டார்.
வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் குறித்து முழுமையாக ஆய்வுசெய்து தரவுகளை ஆவணப்படுத்துவது; வெளிநாட்டுத் தமிழர்களின் பிள்ளைகள் 200 பேரை ஆண்டுதோறும் தமிழ் நாட்டிற்கு வரவழைத்துப் பண்பாட்டுச் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்வது; வெளிநாடுகளிலோ, இந்தியாவின் மற்ற மாநிலங்களிலோ பணிக்குச் சென்று எதிர்பாராவிதமாக இறந்துவிடும் தமிழர்களின் குடும்பத்திற்கு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்துவது; அயல் நாடுகளுக்குச் செல்வோர் பற்றிய தரவுத் தளம் ஏற்படுத்துவது ஆகியவை அந்த நான்கு திட்டங்கள்.
எந்த வளமும் இல்லாத சிங்கப்பூர் பொருளியலில் வளர்ச்சி கண்டு, தமிழர்கள் உட்பட லட்சக்கணக்கான வெளிநாட்டினருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்துள்ளதைச் சுட்டிய திரு தினகரன், இருதரப்பும் ஒன்று மற்றதன் மண்ணில் முதலீடு செய்ய இன்னும் கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்றார்.
அயலகத் தமிழர் தினத்தின் முதல் நாள் நிகழ்ச்சியில் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் திரு. நா. ஆண்டியப்பனும் கவிமாலைக் காப்பாளர் திரு. மா. அன்பழகனும் உரையாற்றினர்.


