நமது உணவுப் பழக்கம் நமது பண்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தமிழக முன்னாள் தகவல் ஆணையர் முனைவர் சாரதா நம்பி ஆரூரன் கூறியிருக்கிறார்.
சென்னைப் புத்தகக் காட்சியில் சிங்கப்பூரின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள காட்சிக் கூடத்தில் கடந்த வியாழக்கிழமை, சிங்கப்பூர் எழுத்தாளர் திரு ஷாநவாசின் 'அயல் பசி' நூலை அறிமுகம் செய்தபோது அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.
இந்தோனீசிய, ஜப்பானிய, அமெரிக்க, பிரெஞ்சு உணவுக் கலாசாரங்கள், உணவு வகைகள், உணவுத் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் விதவிதமான கத்திகள், கருவிகள், விதவிதமான உணவு வகைகளைப் பரிமாறுவதற்கான மாறுபட்ட முறைகள், உலகப் பிரபலங்களின் விசித்திரமான உணவுப் பழக்கங்கள் உள்ளிட்ட உணவு தொடர்பான பல்வேறு விவரங்களை 'அயல் பசி' நூல் விவரிப்பதாக முனைவர் சாரதா தெரிவித்தார்.
தற்போது பாஸ்டா எனும் உணவு தமிழர்கள் உள்ளிட்ட அனைவரின் விருப்ப உணவாக மாறியிருக்கிறது; இதனால் விருந்துண்ணும் நிலைகூட மாறியிருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
ஏற்புரை ஆற்றிய நூலாசிரியரும் சிராங்கூன் டைம்ஸ் இதழின் ஆசிரியருமான திரு ஷாநவாஸ், தான் உணவுக் கடைகளில் பணியாற்றியபோது சந்தித்த பல்வேறு சவால்கள் பற்றிக் கூறினார். அவற்றின் தாக்கமே இந்நூல் என்றார் அவர்.
எழுத்தாளர் கழகத் தலைவர் திரு. நா. ஆண்டியப்பன் வரவேற்புரையும் துணைத் தலைவர் திரு. சு. முத்துமாணிக்கம் நன்றியுரையும் ஆற்றினர்.

