தண்ணீர் உடலுக்கு அவசியம். தினமும் குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீர் குடிப்பது பெரும்பாலானவர்களுக்கு நன்மை பயக்கும் என்று மருத்துவர்கள் பலகாலமாக அறிவுறுத்தி வருகின்றனர்.
இது நம்மில் பலருக்குத் தெரிந்த ஒன்று என்றபோதும் சில நேரங்களில் தண்ணீர்தானே என்று நாம் அலட்சியமாக இருந்துவிடுவது உண்டு.
உடலில் தண்ணீர் பற்றாக்குறை, பல்வேறு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கக்கூடும். உடல் சோர்வு, தசை வலி, தலை சுற்றல், குளிர்நடுக்கம் போன்றவை ஏற்படக்கூடும் என்று மருத்துவம் கூறுகிறது.
இப்போது அண்மைய ஆய்வொன்று போதுமான தண்ணீர் குடிப்பதால் உடல் வேகமாக மூப்படைவதைத் தடுக்கலாம் என்றும் பல நீண்டகால நன்மைகளை அது அளிக்கும் என்று தெரிவித்துள்ளது.
போதுமான தண்ணீர் குடிக்காதபோது அதற்கு நேர் எதிரான விளைவுகள் ஏற்படக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளது.
இபயோமெடிசன் எனும் ஆய்விதழில் அந்த ஆய்வு வெளியிடப்பட்டிருந்தது. 30 ஆண்டு காலகட்டத்தில் 11,255 பெரியவர்களின் உடல்நல விவரங்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.
உடலில் தண்ணீர் அளவு குறையும்போது ரத்தத்தில் உப்பின் அளவு கூடுகிறது. அவ்வாறு ரத்தத்தில் உப்பின் அளவு கூடும்போது உடலில் ஏற்படும் மாற்றங்களை ஆய்வாளர்கள் கவனித்தனர்.
ஆய்வில் கலந்துகொண்டவர்கள் சுமார் 40 முதல் 50 வயது இருந்தது முதல், அவர்கள் 70 வயதைக் கடந்த வரை அவர்களின் உடல்நலம் ஆராயப்பட்டது.
உடலில் உப்பின் அளவு குறைவாக இருந்தவர்களைவிட அது சற்று அதிகமாக இருந்தவர்களுக்கு நாள்பட்ட நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகரித்தது.
அவர்களுக்கு இதய செயலிழப்பு, பல்வேறு இதய நோய்கள், வாதநோய், நுரையீரல் நோய்கள், நீரிழிவு, மறதிநோய் போன்றவை ஏற்படும் அபாயம் அதிகமாய் இருந்தது.
மேலும், அத்தகையோரின் உடல் மற்றவர்களைவிட வேகமாக மூப்படைந்தது. அதனுடன் உடலில் அதிக உப்பு இருந்தவர்கள் இளம் வயதில் மரணம் அடையும் அபாயமும் உயர்ந்தது.
உடலில் போதுமான நீர்ச்சத்து இருந்தால், உடல் மூப்பை மெதுவடையச் செய்யலாம் என்றும் நோய்கள் பீடிப்பதைத் தள்ளிப் போடலாம் என்றும் ஆய்வு முடிவுகள் காட்டுவதாக அமெரிக்க தேசிய சுகாதார நிலையத்தைச் சேர்ந்த ஆய்வாளர் நட்டாலியா டிமிட்ரீவா தெரிவித்தார்.
தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மை
தண்ணீர் உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஊட்டச்சத்துகளைச் சுமந்து செல்வதுடன் கழிவுகளை வெளியேற்றுகிறது.
மாசுக்கள், ஆரோக்கியமற்ற உணவு வகைகளை உண்பதால் நமது உடலில் ஒரு நாளில் பல மில்லியன் கழிவுகள் சேரும். அவற்றை உடலிலிருந்து முறையாக வெளியேற்ற தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும்.
நமது உடலில் உள்ள 80 விழுக்காட்டுத் தசைகள் நீரால் சூழப்பட்டுள்ளன. உடலில் போதிய தண்ணீர் இல்லாவிட்டால், தண்ணீருக்குப் பதில் உடலில் கழிவுகள் தங்கி, பிடிப்புகளை ஏற்படுத்தும். எனவே அவற்றை வெளியேற்ற நீர் மிகவும் அவசியம் ஆகும்.
பலருக்கு மலச்சிக்கல் பெரிய பிரச்சினை. அதைக் குறைக்க அதிகத் தண்ணீர் அவசியம்.
தண்ணீர் குடல் இயக்கத்தை சீராக வைத்திருக்க உதவுவதே அதற்குக் காரணம். போதுமான தண்ணீர் குடிப்பதால் வயிற்றில் அமிலத்தன்மையும் குறையும்.
மேலும், தண்ணீர் மூளையில் 90 விழுக்காடு பங்கு வகிக்கிறது. போதிய தண்ணீர் உடலில் இல்லாவிட்டால், தலைவலி, சோர்வு, மறதி போன்றவை அதிகம் ஏற்படும். அதிலும் 24 மணிநேரத்திற்கு மேலாக உடல் வறட்சி இருந்தால், அது மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
அத்துடன், போதுமான தண்ணீர் குடிப்பது, ஒழுங்காக சிறுநீர் கழிக்கவும் கல்லீரலில் கற்கள் ஏற்படுவதைத் தடுக்கவும் உதவும்.

