நாள் முழுவதும் அமர்ந்துகொண்டே இருப்பவர்கள் 30 நிமிடத்துக்கு ஒருமுறை, ஐந்து நிமிடங்கள் நடந்தால் அவர்களின் உடலுக்கும் மனதுக்கும்
பல நன்மைகள் உண்டு என்கிறது ஓர் அமெரிக்க ஆய்வு.
நாள் முழுவதும் கணினியின் முன் அமர்ந்து வேலை செய்துகொண்டே இருப்பவர்கள் அல்லது சோஃபாவில் உட்கார்ந்தவாறு அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பவர்கள் பலரும் அதனால் தங்கள் உடல்நலத்துக்குத்தான் கேடு என்பதை அறிந்திருப்பார்கள்.
அமர்ந்தே நாளைக் கழிப்பவர்களுக்கு நீரிழிவு, மறதிநோய், இதய நோயால் மரணம் ஏற்படுதல் போன்றவற்றின் அபாயம் கூடுகிறது. ஒருவர் உடற்பயிற்சி செய்தபோதும் தினமும் 12 முதல் 13 மணி நேரம் வரை அமர்ந்திருந்தால், ஆகக் குறைவான நேரம் அமர்ந்திருப்பவர்களைவிட அவர் விரைவாகவே மரணமடையும் வாய்ப்பு இரட்டிப்பாகிறது.
அந்த அபாயத்தை ஒரு சிறிய மாற்றம் குறைக்கிறது என்ற நற்செய்தியைப் புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
அமர்ந்தே இருப்பதால் உடல்நலத்துக்கு ஏற்படும் அபாயத்தைக் குறைக்க ஒருவர் செய்யவேண்டிய குறைந்தபட்ச உடல் அசைவுகள் என்ன என்பதைக் கண்டறிவது ஆய்வின் நோக்கமாகும்.
நியூயார்க் நகரில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழக மருத்துவ நிலையத்தைச் சேர்ந்த மருத்துவர் கீத் டியஸ் ஆய்வை வழிநடத்தினார்.
அமெரிக்க விளையாட்டுத் துறை மருத்துவக் கல்லூரியின் ஆய்விதழில் ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
தங்கள் ஆய்வுக்கூடத்துக்கு வந்து தினமும் பணியிடத்தில் இருப்பதுபோல தொண்டூழியர்கள் பல மணி நேரத்தைக் கழித்தனர். அவர்களின் ரத்த சர்க்கரை அளவும் ரத்த அழுத்த அளவும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது. வெவ்வேறு நேரங்களில் ஆய் வாளர்கள் அவர்களை நடக்க வைத்தனர். சிலர் அரை மணி நேரத்துக்கு ஒரு முறையும் சிலர் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறையும் நடந்தனர். அவர்கள் நடந்த நேரம் ஒரு நிமிடம் அல்லது ஐந்து நிமிடம். சிலர் நடக்கவே இல்லை.
30 நிமிடத்துக்கு ஐந்து நிமிடம்
30 நிமிடம் அமர்ந்துவிட்டு ஐந்து நிமிடம் நடந்தவர்களுக்கு, அமர்ந்தே இருப்பதால் ஏற்படும் பல உடல்நலக் கேடுகள் குறைந்தன. அதுவும் ஆய்வு செய்யப்பட்டவர்கள் பெருவேகத்தில் நடக்கவில்லை. நடைப்பயிற்சி சாதனத்தில் மணிக்கு 1.9 மைல் (3.05 கிலோமீட்டர்) எனும் வேகத்தில்தான் அவர்கள் நடந்தனர். அந்த வேகத்தில் நடந்தவர்களுக்கு உடலில் பல மாறுதல்கள் நிகழ்ந்ததைக் கண்டு வியந்ததாக தலைமை ஆய்வாளர் டாக்டர் டியெஸ் கூறினார்.
ஒருவர் உணவு உண்டபிறகு சர்க்கரை அளவு உயரும் என்பது தெரிந்ததே. இந்த ஆய்வில், அரை மணி நேரத்துக்கு ஒரு முறை ஐந்து நிமிடம் நடந்தவர்களுக்கு உணவு உண்ட பின்னர் ஏற்படும் ரத்த சர்க்கரை உயர்வு 58 விழுக்காடு குறைந்தது.
தசைக்கு அடிக்கடி வேலை தரவும்
ரத்தத்தில் உள்ள சக்கரை, கொழுப்பு அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க நமது தசைகள் உதவுகின்றன. ஆனால் அந்தப் பணி நிறைவேற, தசைகளைப் பயன்படுத்தவேண்டும். அவை குறுகவேண்டும்.
"பல மணி நேரம் அமர்ந்திருக்கும்போது தசைகள் ரத்த சர்க்கரை, ரத்தக் கொழுப்பு அளவைக் குறைக்கும் வேலையில் முழுமையாக உதவுவதில்லை.
"சிற்றுண்டிகளைப் போல அடிக்கடி சிறுநடைகளை மேற்கொள்ளும்போது தசைகளுக்கு அசைவு கிடைத்து அவை செயலில் இறங்குகின்றன. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு, ரத்தக் கொழுப்பு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் தசைகளின் திறன் மேம்படுகிறது," என்று டாக்டர் டியஸ் விளக்கினார்.
மேலும், ஆய்வு செய்யப்பட்டவர்களில் நடக்காமல் இருந்தவர்களைவிட சிறு நேரத்துக்கு நடந்தவர்களின் ரத்த அழுத்தம், 5 எம்எம்எச்ஜி அளவு குறைந்தது என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.
அமர்ந்தே இருக்கும்போது கால் ரத்த நாளங்கள் வளையவும் குறுகவும் செய்கின்றன. அதனால் ரத்த நாளங்கள் முறுக்கப்பட்டு, ரத்த ஓட்டம் பாதிக்கப் படுகிறது. இது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது என்று டாக்டர் டியஸ் விவரித்தார்.
அடிக்கடி எழுந்து நடப்பதால், கால்களில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும் என்றும் சீரான ரத்த ஓட்டம் ரத்த அழுத்தம் ஏற்ற இறக்கத்தைத் தடுக்க உதவும் என்றும் அவர் கூறினார்.
அத்துடன், நாள் முழுவதும் அமர்ந்தே இருந்தவர்களைவிட அரை மணி நேரத்துக்கு ஒரு முறை ஐந்து நிமிடம் இலேசாக நடந்தவர்களிடம் சோர்வு குறைந்ததையும் மகிழ்ச்சி அதிகரித்ததையும் ஆய்வாளர்கள் கவனித்தனர்.
அதனால் அடிக்கடி எழுந்து நடப்பது மனதுக்கு உற்சாகம் தரும் என்று அவர்கள் கூறினர்.

