மோனலிசா
சன்லவ் இல்லத்தில் மூத்தோர் அனைவரும் ஜனவரி 14ஆம் தேதி ஒன்றிணைந்து பாரம்பரிய முறையில் பொங்கல் வைத்துக் கொண்டாடினர்.
பொங்கல் பொங்கி வரும் போது அனைவரும் தமிழில் 'பொங்கலோ பொங்கல்' என்று கூறி மகிழ்ந்தனர். பொங்கல் பண்டிகையின் வரலாற்றுப் பின்னணியும் கொண்டாட்ட முறைகளும் மூத்த குடியிருப்பாளர்களுக்கு விளக்கப்பட்டது. வண்ண ஆடைகள் உடுத்தியும் மலர்கள் சூடியும் அவர்கள் கொண்டாட்ட உணர்வை வெளிப்படுத்தினர்.
ஹவ்காங் வட்டாரத்தைச் சார்ந்த சன்லவ் மூத்தோர் நடவடிக்கை நிலையத்தில் நடைபெற்ற இக்கொண்டாட்ட நிகழ்வில் 30க்கும் மேற்பட்ட பல இன முதியவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கெடுத்தனர்.
"இதுபோன்ற பல இன, பல சமய நிகழ்வுகளை ஒன்றுகூடி கொண்டாடுவது சிங்கப்பூரின் ஒருமைப்பாட்டை பிரதிபலிக்கிறது.
"பன்முக கலாசார சூழலில் இது சமூகப் பிணைப்பை ஏற்படுத்தும். குறிப்பாக மூத்தோர் இதில் ஈடுபடுவது இளைய தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக அமையும்," என்று சன்லவ் இல்லத்தின் தலைமை திட்ட அதிகாரி ராஜா மோகன் கூறினார்.
சன்லவ் இல்லத்தின் சிராங்கூன் நிலைய ஒருங்கிணைப்பாளர் ரீட்டா சாமி, "கொவிட் சூழலில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டன. ஈராண்டு இடைவெளிக்குப் பின் இந்த நிகழ்வு நடைபெற்றது. இவ்வகை கலாசார நிகழ்ச்சிகளை மூத்தோர் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்," என்று குறிப்பிட்டார்.
இந்தப் பொங்கல் கொண்டாட்டத்தில் பங்கு பெற்றவர்களில் ஒருவர் தமிழ்வாணி நாராயணசாமி, 65.
"பல்வேறு இன, சமய நண்பர்களுடன் இணைந்து பொங்கல் வைத்த அனுபவம் மகிழ்ச்சியளித்தது. நமது மரபைப் பற்றி பிற இனத்தவருக்கு எடுத்துக் கூறும் வாய்ப்பு கிடைத்ததாக உணர்கிறேன். அவர் களுக்கு பொங்கல் வைக்கவும் கற்றுத்தந்தது மறக்க முடியாத அனுபவம்," என்று அவர் கூறினார்.