தமிழ்நாட்டில் நடந்துவரும் மிகப் பிரபலமான சென்னை புத்தகக் கண்காட்சியில் அனைத்துலக புத்தகக் கண்காட்சி தொடங்கியது. அதில் அனைத்துலக அளவிலான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
அந்த மாநிலத்தின் பள்ளி, கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த திங்கள்கிழமை கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். கண்காட்சியில் சிங்கப்பூர் காட்சிக்கூடமும் அதே நேரத்தில் திறக்கப்பட்டது.
சிங்கப்பூர் காட்சிக்கூடத்தைத் திறந்துவைத்த சிங்கப்பூர்த் துணைத் தூதர் எட்கர் பாங்கிற்கு தமிழக அமைச்சர் பொன்னாடை போர்த்தி நூல் ஒன்றைப் பரிசளித்தார். துணைத் தூதர் பாங், சிங்கப்பூர்க் கூடத்திற்கு வருகையளித்து அங்குள்ள நூல்களின் விவரங்களைக் கேட்டறிந்தார்.
அனைத்துலகப் புத்தகக் காட்சியில் சிங்கப்பூருக்கு இரண்டு கூடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒன்றை சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் நிர்வகிக்கிறது. மற்றொன்றை கிரிம்சன் எர்த் வெளியீட்டு நிறுவனம் நிர்வகிக்கிறது.
அக்கூடங்களில் விற்பனை இடம்பெறவில்லை. புத்தகங்களைக் காட்சிக்கு வைப்பதுடன், அங்கு வரும் பதிப்பகத்தார், எழுத்தாளர்களுக்கு விளக்கமளிக்கப்படுகிறது.

