கியட் ஹாங்கில் பாரம்பரிய கிராமிய சூழலில் ஆடி, பாடி, ரசித்து, உண்டு களித்த மக்கள்
கியட் ஹாங் இந்தியர் நற்பணிச் செயற்குழு கடந்த ஞாயிறன்று பொங்கல் கொண்டாட்ட சாதனை படைத்தது.
குடியிருப்பாளர்கள், சமூகத்தினர் என 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட அந்த விழாவில், 294 பேர் ஒன்றாக பொங்கல் பானை வைத்து 'பொங்கலோ பொங்கல்' சொல்லி புதிய சாதனை படைத்தனர். மொத்தம் 1,200 பேருக்கு வாழை இலையில் மதிய உணவு பரிமாறப்பட்டது.
லிட்டில் இந்தியா வர்த்தகர், மரபுடைமைச் சங்கத்தால் (லிஷா) இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட நாட்டுப்புற பாடகர்களும் நாதஸ்வர, தவில் இசைக் கலைஞர்களும் மக்களை மகிழ்வித்தனர்.
காவடியாட்டம், பொய்க்கால் குதிரை, மயிலாட்டம் ஆகியவற்றையும் மக்கள் கண்டு களித்தனர். குறிப்பாக, ஐந்தடுக்கு தீக்கரகம் ஏந்தி ஆடிய இந்திய நடனமணியின் மேடை நடனத்தை மக்கள் பெரிதும் ரசித்துப் பாராட்டினர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சுவா சூ காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஸுல்கர்னைன் அப்துல் ரஹிம், குத்துவிளக்கேற்றி கொண்டாட்டத்தைத் தொடங்கிவைத்தார்.
இது பற்றி கருத்து தெரிவித்த கியட் ஹாங் இந்தியர் நற்பணிச் செயற்குழு, கிராமங்களில் கொண்டாடப்படும் பொங்கல் விழா உணர்வை கியட் ஹாங் வட்டாரத்துக்குக் கொண்டு வரவேண்டும் என்பதே நோக்கமாக இருந்ததாகக் கூறியது.
இந்தக் குழு, கடந்த 2019ஆம் ஆண்டில் முதன்முதலாக 224 பேர் ஒரே இடத்தில் பொங்கல் பானை வைத்துப் பொங்கி சாதனை படைத்தது. அந்தச் சாதனையை விஞ்சும் வகையில் இந்த ஆண்டில் மொத்தம் 294 பேர் ஒன்றாக பொங்கல் வைத்தது புதிய சாதனையானது.
"சில ஆண்டுகாலமாய் முழு வீச்சில் சமூகத்தினருடன் இணைந்து பொங்கலை கொண்டாட முடியாத குறையைத் தீர்த்து வைக்க நாங்கள் முற்பட்டோம்.
"கொவிட்-19க்குப் பின்னர் மக்கள் பெரிய அளவில் ஒன்றுகூடிய ஒரு நிகழ்ச்சியாக இந்தஆண்டின் பொங்கல் விழா அமைந்தது," என்று செயற்குழுத் தலைவர் அருமை சந்திரன் கூறினார்.
ஆ. விஷ்ணு வர்தினி

