பொங்கல் பண்டிகையையும் விரைவில் பிறக்கவிருக்கும் சீனப் புத்தாண்டையும் ஒருங்கே கொண்டாடும் வகை யில் புக்கிட் பாத்தோக்கில் கடந்த சனிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
'பழையன கழிதலும் புதியன புகுதலும்' என்ற மரபையொட்டி 400 கிலோ பழைய துணிமணிகளும் 200 கிலோ காகிதப் பொருள்களும் சேகரிக்கப்பட்டு அவற்றுக்குப் பதிலாக குடியிருப்பாளர்களுக்கு அரிசி, நூடுல்ஸ் போன்ற மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன.
பொங்கல் பானை வைத்து பொங்குதல், கோலம் போடுதல், சிங்க நடனம், சீன எழுத்தோவியம் என எல்லா அம்சங்களும் சேர்ந்து இரண்டு புராதன கலாசாரங்களையும் விழா வெளிப்படுத்தியது.
இந்தியர்கள் பெரிதும் விரும்பிச் சாப்பிடும் 500 வடைகளைத் தயாரித்து அவற்றைக் கொண்டு அமோக விளைச்சலைக் குறிக்கும் 'ஃபங்' என்ற சீன எழுத்தை ஆகப் பெரியளவில் எழுதி அலங்கரித்து புக்கிட் பாத்தோக் குடியிருப்பாளர் தொடர்புக் கட்டமைப்பு சிங்கப்பூர் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது.
"எதிர்பார்த்ததைவிட அதிக மக்கள் திரண்டனர். சீனர்கள், இந்தியர், மலாய்க்காரர்கள் குடும்பத்தோடு கலந்துகொண்டதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தோம்.
"கலாசாரப் புரிதலை மேம்படுத்தும் நோக்கில் இந்த விழா நல்ல வாய்ப்பாக அமைந்ததாக குடியிருப்பாளர்கள் பலரும் பாராட்டினர்," என புக்கிட் பாத்தோக் வட்டாரம் 11ன் குடியிருப்பாளர் தொடர்புக் கட்டமைப்புத் தலைவர் ஜான் டான் கூறினார்.

