ஒன்பது விடுதிகளிலும் ஓராயிரம் பேர் பங்கேற்ற மங்கலப் பொங்கல்

ஒன்பது விடுதிகளிலும் ஓராயிரம் பேர் பங்கேற்ற மங்கலப் பொங்கல்

2 mins read
5171d0da-03c9-434e-83d1-05b3d238fcdb
-

ரச்சனா வேலாயுதம்

பொங்கல் திருநாளை ஆண்டுதோறும் கொண்டாடும் வெஸ்ட்லைட் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதி, இந்த ஆண்டு பல நிகழ்ச்சிகளோடு பொங்கல் பானைகள் வைத்து பண்டிகையை வெகு விமரிசையாகக் கொண்டாடியது.

சிங்கப்பூர் முழுவதும் உள்ள ஒன்பது வெஸ்ட்லைட் விடுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பொங்கல் வழிபாட்டில், கொண்டாட்டங்களில் கலந்துகொண்டனர்.

கொவிட்-19 காரணமாக ஈராண்டுகளுக்குப் பிறகு வெளிநாட்டு ஊழியர்கள் ஒன்றுசேர்ந்து பொங்கல் பண்டிகையைக் குதூகலமாகக் கொண்டாடினர்.

"நான் இங்கு வந்த ஐந்து ஆண்டுகளில் இந்த விடுதி, தமிழக கிராமங்களில் கொண்டாடுவதுபோல பொங்கலைக் கொண்டாடுகிறது.

"இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு எல்லாரும் ஒன்றுசேர்ந்து பொங்கலை பிரம்மாண்டமாகக் கொண்டாட வெஸ்ட் லைட் விடுதி உதவி உள்ளது," என இரா. வைரச்செல்வன் என்ற ஊழியர் கூறினார்.

அங்குள்ள மூத்த ஊழியர்கள் தெய்வப் படங்களை வைத்து பூஜை செய்த பின், கரும்பு, தோரண அலங்காரம் செய்து பொங்கல் பொங்கி படைத்து பிறகு உண்டனர்.

எஸ். கலையரசன், சி. அன்பழகன் போன்ற ஊழியர்கள் தங்கள் அறைகளிலேயே நண்பர்களுடன் பொங்கலைப் பொங்கி படைத்து கொண்டாடி பகிர்ந்து உண்டு மகிழ்ந்தனர்.

இந்த ஆண்டு பொங்கல், ஓய்வு நாளான ஞாயிற்றுக்கிழமையன்று வந்ததால் பலர் காலையில் கோவிலுக்குச் சென்று வழிபட்டு வந்து கொண்டாட்டத்தைத் தொடங்கினர். ஆடல், பாடல் உட்பட பிற்பகலில் நடந்த உறியடிப் போட்டியிலும் பலர் கலந்து கொண்டு விளையாடினர்.

"இதுபோன்ற பாரம்பரிய பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் ஈடுபடும்போது இந்தியா நினைவுக்கு வருகிறது," என்று எஸ் விஷ்ணு என்ற ஊழியர் தெரிவித்தார்.

வெஸ்ட்லைட் விடுதிகளில் சுமார் 239,358 தங்கி உள்ளனர். அவர்களில் 90 விழுக்காட்டினர் இந்தியா, பங்ளாதேஷை சேர்ந்தவர்கள்.

வெஸ்ட்லைட் விடுதியின் செயலி மூலம், ஊழியர்கள் தங்களின் அன்பளிப்பையும் சர்க்கரைப் பொங்கலையும் பெற்றுக்கொண்டார்கள். ஊழியர்கள் செயலி மூலம் அதிர்ஷ்டக் குலுக்கில் பங்கேற்றனர். பரிசுகளை வென்றனர்.

விடுதியில் வசிக்கும் இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்த பலரும் பொங்கல் கொண்டாடவில்லை என்றா லும் அவர்கள் தமிழர்களுடன் சேர்ந்து கொண்டாட்டங்களில் கலந்துகொண்டு மகிழ்ந்தனர்.

"இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கும்போது, சிங்கப்பூரில் பொங்கலை எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்பது தெரியவருகிறது," என்று கேரளாவைச் சேர்ந்த மது என்பவர் கூறினார்.

சொந்த ஊரில் வசிக்கும் குடும்பத்தாருடன் சேர்ந்து பொங்கலைக் கொண்டாட இயலவில்லையே என்ற ஏக்கம் ஒரு பக்கம் இருந்தாலும் தங்கு விதியில் பொங்கல் பண்டிகையில் கலந்துகொண்டதால் அந்த ஏக்கம் அகன்று ஊக்கம் பிறக்கும் சூழல் இருந்தது என்று பலரும் தெரிவித்தனர்.