கருணாநிதி துர்கா
மாணவர்கள், ஊழியர்கள், ஓய்வுபெற்றவர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் இன்று கவனச்சிதறல் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
2004ஆம் ஆண்டில் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் தகவல்துறைப் பேராசிரியரான குளோரியா மார்க் வேலையிடச் சூழலில் கவனச்சிதறல் பற்றிய ஆய்வுகளை நடத்தியவர்.
ஒரு பணிநாளில் எவ்வளவு முறை நமது கவனம் சிதறுகிறது என்று நாம் மதிப்பிடுவதைவிட 25 மடங்கு கூடுதலாக கவனச்சிதறல் நிகழ்வதாக அவர் கூறுகிறார். கவனம் சிதறிய பின்னர், செய்துகொண்டிருந்த பணிக்குத் திரும்ப சராசரியாக 23 நிமிடம் எடுக்கும் என்று அவர் மதிப்பிட்டார்.
கவனச்சிதறலுக்கு முக்கிய காரணமாக இன்று தொழில்நுட்பச் சாதனங்கள் உள்ளன. நாம் காலையில் கண்விழித்தவுடன் முதலில் பார்ப்பது கைப்பேசித் திரையைத்தான். நாள் முழுவதும் அது நம் கையைவிட்டு நீங்காமல் இருக்கிறது.
கடந்த ஆண்டு மேல்நிலைத் தேர்வுகளை முடித்துவிட்டு தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கும் நரசிம்மமூர்த்தி தமிழ்மதி, 18, தொழில்நுட்பம் தனக்கு பெரிய அளவில் ஒரு கவனச்சிதறலாக அமைந்தது என்றார்.
"வாட்ஸ்அப், இன்ஸ்டகிராம், ஃபேஸ்புக் போன்ற தகவல் தொடர்பு செயலிகளின்மூலம் மற்றவர்களுடன் எந்நேரத்திலும் என்னால் இணைந்திருக்க முடிகிறது. அதே நேரத்தில் கவனம் அடிக்கடி கைப்பேசியின் பக்கம் திசைதிரும்புகிறது. அது செயல்திறனைக் குறைக்கிறது," என்றார் தமிழ்மதி.
உடற்பயிற்சி மருத்துவத்தில் மூத்த ஆலோசகராக பணிபுரியும் ரத்தின பிரியா, 45, தொழில்நுட்பச் சாதனங்களாலும் கைப்பேசியில் கவனம் குவிந்துள்ளதாலும் பலர் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை என்றார்.
"எங்குச் சென்றாலும் கைப்பேசியில் மூழ்கி இருப்பதால் பிறருடன் நேரில் பேசுவது குறைந்து விட்டது. இதனால் உறவுகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம்குறைகிறது," என்றார் பிரியா.
'லஸாடா', 'ஷாப்பி' போன்ற இணைய வர்த்தகத் தளங்கள் தமக்கு பெரிதும் கவனச்சிதறலாய் அமைவதாக பிரியா கூறினார்.
தேசிய தொடக்கக்கல்லூரியின் முன்னாள் மாணவர் நிரஞ்சனா ராமசாமி, 18, தாம் ஆக்க பூர்வமாக செயல்படுவதற்கு தொழில்நுட்பம் இன்றியமையாததாக விளங்குகிறது என்றார்.
'இயோல்பும்டா' (Yeolpumta), 'ஃபோரஸ்ட்' (Forest) போன்ற செயலிகளின் உதவியுடன் படிக்கும் அல்லது வேலை செய்யும் நேரத்தை அவர் கணக்கிடுகிறார்.
"அத்துடன் அச்செயலிகளில் என் நண்பர்கள் ஆக்கபூர்வமாக செயல்பட்ட நேரத்தையும் என்னால் பார்க்க முடியும். இவை நமக்கும் நமது நண்பர்களுக்கும் இடையே ஆரோக்கியமான போட்டியை உருவாக்கும்," என்று நிரஞ்சனா குறிப்பிட்டார்.
தொழில்நுட்பச் சாதனங்களால் ஏற்படும் கவனச்சிதறல்களைத் தவிர்க்க சில கட்டுப்பாடு களை நிரஞ்சனா விதித்துக் கொள்கிறார். சமூக வலைத்தளங்கள், பொழுதுபோக்கு செயலிகள் போன்றவற்றில் குறைந்த நேரம் செலவிடுவதை உறுதிசெய்ய அவற்றின் தகவல்கள் அறிவிப்பு செயல்பாட்டை நிறுத்தி வைத்துவிடுவதாக அவர் கூறினார்.
'யுனிவர்ஸல் சலுஷன்' நிறுவனத்தின் பொறியியல் இயக்குனர், அழகு திருநாவுக்கரசு, 48, தொழில்நுட்பம் பணிசார்ந்த உற்பத்தித் திறனை வெகுவாக அதிகரித்துள்ளதாக கூறினார்.
சில நிர்வாக வேலைகளுக்காக இந்தியாவில் இருப்போருடன் இணைந்திருக்க மைக்கிரோசாஃப்ட் தளங்களை அவர் பயன்படுத்துகிறார். குறிப்பாக கொவிட்-19 காலத்தில் தொழில்நுட்ப வசதிகளால் தான் ஆவணங்களை பிறருடன் பகிர்ந்து வீட்டிலிருந்தே வேலை செய்ய முடிந்தது என்றார் அவர்.
"ஆனால் எவ்வளவுதான் உதவியாக இருந்தாலும் பிரச்சினைகள் உள்ளன. உதாரணத்துக்கு இணையத்தில் மோசடிகளில் சிக்கிக்கொள்ளும் ஆபத்து இருக்கிறது. இதனால் மனநலன் பாதிக்கப்பட்டு செயல்திறன் குறையக்கூடும்," என்று அழகு திருநாவுக்கரசு எச்சரித்தார்..
dhurga@sph.com.sg

