குழந்தைகள் கெட்ட வார்த்தை பேசினால் பெரும்பாலான பெற்றோருக்கு திக்கென்று ஆவது இயல்புதான்.
ஆனால் அச்சப்படத் தேவையில்லை. பெரும்பாலான நேரங்களில் அவர்களுக்கு தாங்கள் உச்சரிக்கும் சொல்லின் பொருளோ அதன் தாக்கமோ தெரிவதில்லை.
சிறுவர்கள் இளம் வயதில் தகாத சொல் பேசுவதும் காலப்போக்கில் அதைக் கைவிடுவதும் இயற்கை என்றும் சிறுவர்கள் முன்பைவிட இளம் வயதில் தகாத சொல் பேசுவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.
அமெரிக்காவைச் சேர்ந்த சமூகமொழியியல் பேராசிரியர் திமத்தி ஜே, முந்தைய 30 ஆண்டுகளைவிட இளம் வயதிலேயே இரண்டு வயது மழலையர்கூட தகாத சொல் பேசுவதாக பிரிட்டனில் 2010ல் நடந்த சமூகமொழியியல் கருத்தரங்கில் புள்ளிவிவரத்தை முன்வைத்தார்.
குழந்தைகளின் வளர்ச்சியின் ஒரு பகுதியாக தகாத சொல்லைப் பேச முயற்சி செய்வதாக மருத்துவ மனநல நிபுணர் டாக்டர் நேட்டலி கேம்ஸ் கூறினார். அதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளதாகவும், இத்தகைய சொற்களை பாலர்கள் பயன்படுத்தும்போது அவர்கள் தங்கள் மொழியைப் பரிசோதிக்க அவ்வாறு செய்வதாகவும் டாக்டர் கேம்ஸ் தெரிவித்தார். பிள்ளைகள் தகாத சொல்லைப் பயன்படுத்தும் போது பெற்றோர் அதை எதிர் கொள்ள நிபுணர்கள் சில வழிகளைப் பரிந்துரைக்கின்றனர்.
அளவுக்கு அதிகமாக உணர்ச்சிவசப்பட வேண்டாம் என்றார் எஸ்ஜிஃபேமிலிஸ் அமைப்பைத் தோற்றுவித்த எஸ்தர் ஃபூங்-டான். பெற்றோர் உணர்ச்சிவசப்பட்டு எதிர்கொண்டால், பிள்ளைகள் அவர்களின் முன் தகாத சொற்களைத் தவிர்த்துவிட்டு மற்ற இடங்களில் அவற்றைப் பயன்படுத்தக்கூடும் என்று அவர் கூறினார்.
சில நேரங்களில் ஓர் உணர்வை வெளிப்படுத்த விரும்பி, அதற்கான பொருத்தமான சொற்கள் வராத போது பிள்ளைகள் தகாத சொல்லைப் பயன்படுத்தக்கூடும் என்று திருவாட்டி ஃபூங்-டான் குறிப்பிட்டார்.
"எனக்கு எரிச்சலாக உள்ளது என்று கூறவோ அந்த நேரத்தில் தூர நடந்துவிடும்படியோ பெற்றோர் பிள்ளைகளுக்குக் கற்றுத்தரலாம்," என்றார் மனநல ஆலோசகர் டாக்டர் கேம்ஸ். அல்லது பிள்ளை சற்று அமைதியாகும்போது, "உன் கோபம் எனக்குப் புரிகிறது ஆனால் அதை வெளிப்படுத்த வேறு பொருத்தமான வழிகள் உள்ளன," என்று பெற்றோர் பேசி உணர்த்தலாம் என்றும் டாக்டர் கேம்ஸ் கூறினார்.
பேசி புரிய வைக்கவும்
பிள்ளைகள் கெட்ட வார்த்தை பேசினால் அதைக் கண்டுகொள்ளாமல் விடுவதைவிட பேசி சரிசெய்வதே சிறந்த தீர்வு என்று மருத்துவ மனநல நிபுணர் சான்வின் காங் தெரிவித்தார்.
கெட்ட வார்த்தை பேசுவதால் அச்சூழ்நிலையில் ஏதாவது நன்மை ஏற்படுகிறதா என்றும் அவற்றைப் பேசுவது பழக்கம் ஆகிவிட்டால் மற்றவர்கள் தங்களை எவ்வாறு பார்ப்பார்கள் என்றும் பிள்ளை களுக்குப் பெற்றோர் விளக்க வேண்டும் என டாக்டர் காங் அறிவுறுத்தினார்.
ஆனால், சில நேரங்களில் பிள்ளைகள் தகாத சொல்லைப் பேசி தங்களை வேண்டுமென்றே கோபப்படுத்த நினைப்பதாக பெற்றோருக்குத் தோன்றலாம்.
அந்நேரத்தில் அவர்களிடம் பேசாதும் அதைக் கண்டுகொள்ளாமலும் போவது சிறந்தது என்று டாக்டர் காங் கூறினார். பெற்றோரின் கவனம் கிடைக்காவிட்டால் பிள்ளைகள் அத்தகைய சொற்களைப் பேசுவதை நிறுத்தக்கூடும் என்றார் அவர்.
சிறுபிள்ளைகளின் வாயி லிருந்து தகாதச் சொற்கள் வரும்போது பல நேரங்களில் சிரிப்பு வரலாம். ஆனால் அவ்வாறு வெடித்துச் சிரிக்க வேண்டாம்.
தகாத சொல் பேசினால் பெரியவர்கள் மகிழ்வர் என்ற எண்ணத்தை அது பிள்ளை களுக்கு ஏற்படுத்தலாம் என்று டாக்டர் நேட்டலி கேம்ஸ் விவரித்தார்.
மேலும், பெற்றோர் எந்தச் சொற்கள் ஏற்பில்லாதவை என்பதை பிள்ளைகளுடன் கலந்துபேசி, அச்சொற்களைப் பயன்படுத்தினால் விரும்பிய தொலைக்காட்சியைப் பார்க்க முடியாது போன்ற விளைவுகள் ஏற்படும் என்று எடுத்துக்கூறலாம். பிள்ளைகள் தகாத சொற்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துத் தங்களைத் திருத்திக் கொண்டால் அவர்களின் நன்னடத்தையைப் பெற்றோர் பாராட்டுவது உகந்தது என்றார் டாக்டர் காங்.
பிள்ளைகள் தகாத சொல் பயன்படுத்தினால் அது தங்கள் பிள்ளைவளர்ப்பின் தோல்வி அல்லது பிரதிபலிப்பு என்று நினைக்க வேண்டாம் என்று டாக்டர் காங் அறிவுறுத்தினார். பிள்ளைகள் தவறு செய்வது இயல்பு என்றும் தங்களிடம்தான் பிரச்சினை என நினைக்காமல் பெற்றோர் வழிகாட்டிகளாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

