பிரசன்னா கிருஷ்ணன்
ஒரு காலத்தில் குண்டர் கும்பலில் இருந்து, சிறைக்குச் சென்ற பிறகு தனது வாழ்க்கைப் பாதையை மாற்றிக்கொண்டதுடன் 2013ஆம் ஆண்டு தென்கிழக்காசிய விளையாட்டுகளின் சதுரங்கப் போட்டியில் மலேசியாவுக்கு வெண்கலப் பதக்கமும் வென்று தந்தார் திரு கெங்கேஸ்வரன் முனியன். இவரின் கதையை ஆவணப் படமாக எடுத்துள்ளார் சனத்குமார் கணேசன்.
அமெரிக்காவின் 'லாஸ் ஏஞ்சலிஸ் ஃபில்ம் அவார்ட்ஸ்' திரைப்பட விருது நிகழ்ச்சியில் 'ஆகச் சிறந்த ஊக்கமளிக்கும் திரைப்படம்' என்ற அங்கீகாரத்தைப் பெற்றது 'வாண்டெட்-ஷேட்ஸ் ஆஃப் லைஃப்' ஆவணப் படத் தொடரின் திரு கெங்கேஸ்வரனின் கதையைச் சித்திரிக்கும் அங்கம்.
புதிய பாதைக்குத் தன்னை மாற்றிக்கொள்வதில் பல சிரமங்களை எதிர்கொண்டார் திரு கெங்கேஸ்வரன்.
"புதிய சூழலுக்கு மாறிய பின்பும் எனது எண்ணங்கள் மீண்டும் பழைய பாதைக்குச் செல்லத் தூண்டும். முன்பு தொடர்பில் இருந்தோரை விட்டுவிட்டு வேறு மனிதர்களுடன் பழகுவது சவாலாக இருந்தது.
"எனினும், ஒரு காலகட்டத்திற்குப் பிறகு பழைய வாழ்க்கைச் சூழல் படிப்படியாக விலகத் தொடங்கியது. என்னை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசெல்லும் மக்களை நான் ஈர்க்க ஆரம்பித்தேன்," என்றார் 43 வயது கெங்கேஸ்வரன்.
சதுரங்கத்தைச் சிறப்பாக விளையாடும் திரு கெங்கேஸ்வரன் மற்றவர்களுக்கு அதைக் கற்றுத்தர ஏற்பாடு செய்தனர் வர்த்தகர் இளங்கோ தியாகுவும் அவர் மனைவி கோவும். சதுரங்க மாணவர்களில் ஒருவர்தான் 'வாண்டெட்' படத்தின் இயக்குநர் சனத். ஆசிரியரின் கதையை உலகிற்கு எடுத்துச்சொல்ல இவர் ஆசைப்பட்டார்.
"மனத்திற்குப் பிடித்த துறையைத் தேர்ந்தெடுத்து, அந்தப் பாதையில் சென்றாலே பல நன்மைகள் தேடிவரும். எதிர்பாரா வேளைகளில் அவை வந்து சேரும். அரிய கதைகளைக் கொண்ட சாமானியர்களைப் பற்றியதுதான் இந்த ஆவணப் படத் தொடர்," என்கிறார் சனத், 22.
மாறுபட்ட வாழ்க்கைப் பயணத்தைத் தேர்ந்தெடுத்து சமுதாயத்தில் மறக்கமுடியாத தாக்கத்தை ஏற்படுத்தும் மலேசியர்களின் கதைகளைக் கண்முன் கொண்டுவருவதே இவரின் இலக்கு.
திரு சனத், வர்த்தகம் உள்ளிட்டவை சார்ந்த கல்வியை மாணவர்களுக்கு வழங்கும் அசெண்டாஸ் அனைத்துலக இளையர் அமைப்பின் துணை நிறுவனரும் தலைமைச் செயல்பாட்டு அதிகாரியும் ஆவார்.
'வாண்டெட்' ஆவணப் படத் தொடரில் திரு கெங்கேஸ்வரனின் கதையைக் கூறும் அங்கம் வரும் மார்ச் 26ஆம் தேதி 'பிஜிபிஏசி' எனும் பெட்டாலிங் ஜெயா கலை நிலையத்தில் வெளியிடப்படும். அதன் பிறகு இதை மலேசியாவின் பல்வேறு பள்ளிகளில் திரையிடவும் யூடியூப் தளத்தில் வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. தொலைக்காட்சியில் திரையிடவும் ஆலோசிக்கப்படுகிறது.

