வீடும் அலுவலகமும் அளவுக்கு அதிகமான தேவையற்ற பொருள்கள் நிறைந்து ஒழுங்கற்றுக் கிடந்தால் அதனை உடனேயே மாற்றுவது சிறந்தது. வீடு ஒழுங்கற்று இருந்தால் உடல்நலனுக்கும் மனநலனுக்கும் கேடு என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஒழுங்குள்ள வீடுகளில் வசிப்போரைவிட ஒழுங்கில்லா இடங்களில் வசிப்போருக்கு அதிக மன அழுத்தம் இருப்பதாக ஆய்வுகள் கூறியுள்ளன. மன அழுத்தம், பதற்றத்தை அதிகரித்து உடலில் பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும்.
சுற்றுப்புறம் ஒழுங்கற்று இருந்தால், அது எண்ணவோட்டத்தில் அமைதியில்லை என்பதற்கான அறிகுறி என்று மனநல நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், மன அழுத்தத்தில் உள்ளவர்கள் குப்பையைச் சேர்த்தால் அது சோம்பல் அல்லது தேவையற்ற பொருள்களை சேர்க்கும் ஆசையின் அறிகுறியல்ல.
அது மிதமிஞ்சிய சோர்வின் அறிகுறி என்று ஃபுளோரிடா மாநிலப் பல்கலைக்கழகப் பேராசிரியர் பிரேட் ஷ்மிட் குறிப்பிட்டார்.
தங்களையோ தங்கள் சுற்றுப்புறத்தையோ பேணும் வலிமை அவர்களிடம் இல்லை என்று அவர் கூறினார். குப்பையாக உள்ள வீடு, கவனத்தைச் சிதறடித்து எல்லாம் கைமீறிப் போகிறது என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்.
மாறாக, ஒழுங்கான சுற்றுப்புறம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி, உற்பத்தித் திறனை அதிகரிக்கிறது. கவனம் குவிந்திருக்க அது உதவுகிறது. மன அழுத்தத்தைக் குறைத்து நல்ல தூக்கத்துக்கு வழிவிடுகிறது.
ஒழுங்குபடுத்துவதை எங்கிருந்து தொடங்குவது என்று சிலர் மலைக்கலாம்.
அத்தகையோர் சில குறிப்புகளை நினைவில் கொள்ளலாம். முதல் கட்டமாக, தேவையானவற்றையும் குப்பையையும் அகற்றுவதற்கு தினமும் ஐந்து நிமிடம் ஒதுக்கினால் போதும்.
மேலும், வீட்டில் ஒழுங்கு படுத்த முதலில் ஐந்து பகுதி களைத் தேர்வு செய்யலாம் என்று வீட்டொழுங்கு நிபுணர் நிக்கோலா லூயிஸ் குறிப்பிட்டார்.
அதுவே அதிகம் என்றால் ஓர் இடத்தில் தொடங்கலாம் என்றார் அவர்.
ஒரு பொருள் வேண்டுமா என்பதைத் தேர்வு செய்ய, இது சிறந்ததா, பிடித்ததா அல்லது தேவையா என்று பிரித்துப் பார்க்கலாம் என்று மற்றோர் ஒழுங்கு நிபுணரான எமிலி லே தெரிவித்தார்.
அத்துடன், ஒவ்வொரு நாளும் தேவையற்ற ஒரு பொருளை ஒதுக்கி மற்றவர்க்குக் கொடுத்தால், ஒரு மாதத்தில் 30 தேவையற்ற பொருள்கள் கைவிட்டுப் போகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

