மோனலிசா
பிள்ளைகள் பிறந்த பின்னர் அவர்களே உலகம் என்றாகிப்போனது. அவர்களின் உடல், மன ஆரோக்கியத்தையும் தேவைகளையும் கவனித்துக் கொள்வதிலேயே பெரும்பாலான நேரத்தை செலவிடுகிறேன் என்று கூறினார் மூன்று குழந்தைகளுக்குத் தாயான திவ்யா அருணாச்சலம்.
இவருக்கு எட்டு வயது மகனும் ஐந்து வயது இரட்டையர்களான மகனும்-மகளும் உள்ளனர்.
35 வயது இல்லத்தரசியான இவர் பிள்ளைகள் பிறந்த பின்னர் தன்னுடைய வேலையை விட்டுவிட்டார். உதவியாளரை நம்பி பிள்ளைகளை விட்டுச் செல்வதில் விருப்பம் இல்லாத இவர், சமையல், வீட்டு வேலைகள், பிள்ளைகளின் படிப்பு, பொழுதுபோக்கு என அனைத்தையும் தானே கவனித்துக் கொள்கிறார்.
ஒவ்வொரு மணி நேரத்தையும் திட்டமிட்டுச் செலவிட வேண்டிய சூழலில், முன் போல் தன் கணவருடன் தனிமையில் நேரத்தை செலவிட முடியாது போனதை உணர்ந்தார். அரசாங்க ஊழியராகப் பணிபுரியும் இவரின் கணவருடன் அன்றாடம் சில மணி நேரம் செலவு செய்ய முடிவெடுத்தார்.
பணி முடித்து கணவர் வீடு திரும்பியதும் பிள்ளைகள் வீட்டுப் பாடம் செய்யும் வேளையில், இருவரும் அந்த நாளில் நடைபெற்ற நிகழ்வுகளைப் பகிர ஆரம்பித்தனர்.
இரவில் பிள்ளைகள் உறங்கிய பின் இருவரும் தங்களின் விருப்பமான தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்க்க ஆரம்பித்தனர். கருத்து வேறுபாடுகளினால் சண்டை ஏற்பட்டாலும்கூட இந்தப் பழக்கத்தை கைவிடாத இவர்கள் இதன் மூலம் அன்பும் புரிதலும் அதிகரித்திருப்பதாகவும் கூறினர்.
தங்களுடைய மூன்று வயது மகள் குழந்தைப் பராமரிப்பு நிலையத்தில் இருக்கும் நேரத்தில் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தங்களுக்குப் பிடித்தமான இடங்களுக்குச் சென்று வருகின்றனர் 35 வயதான மென்பொருள் பொறியாளர்களான ஆதித்யா பக்ஷி - மல்லிகா அலை தம்பதியினர்.
வார இறுதியிலேயே திட்டமிட்டோ அல்லது திடீரென்று கூட எங்காவது வெளியில் செல்வோம். மதிய உணவு, காலார ஒரு நடை, கடைத்தொகுதிகளில் ஆடைகள் உட்பட பொருள்கள் வாங்குவது, எங்கேனும் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பது போன்ற குழந்தை பிறப்பதற்கு முன் நாங்கள் அடிக்கடி செல்லும் இடங்களுக்கு மீண்டும் செல்வோம். இதுபோன்ற செயல்பாடுகள் எங்களுக்குப் பழைய இனிமையான நினைவுகளைத் தூண்டுவதோடு மிகுந்த மகிழ்ச்சியையும் அளிக்கும் என்று கூறினார் மல்லிகா.
இவர்களைப் போலவே கிடைக்கும் சொற்ப நேரத்தையும் மகிழ்வுடன் வாழ்க்கைத் துணையுடன் எளிமையான பல வழிகளில் செலவிடலாம். வீட்டில் பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ள துணை இருந்தால், அவர்களிடம் பிள்ளைகளை விட்டுவிட்டு ஒரு சில மணி நேரம் வெளியில் சென்று வரலாம்.
திரைப்படம் பார்த்தல், பிடித்த உணவகத்திற்குச் செல்லுதல், சுற்றுலாத்தலங்களுக்குச் செல்லுதல் போன்றவற்றைச் செய்யலாம். ஆண்டுக்கு ஒருமுறையேனும் கணவனும் மனைவியும் மட்டும் எவ்வித குற்றவுணர்ச்சியுமின்றி சில நாள்கள் ஒரு சிறிய சுற்றுலா சென்று வரலாம்.
பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ள வேறு ஆள் இல்லாதவர்கள் வீட்டிலேயே பல வழிகளில் ஒன்றாக நேரத்தைச் செலவழிக்கலாம்.
ஒன்றாக யோகா உள்ளிட்ட உடற்பயிற்சி செய்தல், ஒன்றாக காலை நேர தேநீர், காப்பியைத் தயாரித்து அருந்துதல், ஒன்றாக அமர்ந்து செய்தித்தாள் படித்தல், உலக நிலவரங்களை விவாதித்தல் போன்ற பல விஷயங்களைச் செய்யலாம்.
நேரம் கிடைக்கும்போதெல்லாம் வீட்டு வேலைகளைப் பகிர்ந்து செய்யலாம். இசை, நடனம், விளையாட்டு போன்ற இணை பொழுதுபோக்கு நடவடிக் கைகளையும் சேர்ந்து செய்யலாம்.
தினசரி இதுபோன்ற ஏதேனும் ஒரு செயலில் ஒன்றாக ஈடுபடும் போது உறவு வலுக்கும், மனக்கசப்புகள் குறையும் என்று கூறினார் மென்பொருள் பொறியாளரான 38 வயது ஜெயராஜ் ஜெயகுமார்.
எழுத்தாளர்களான இவரும் இவருடைய மனைவி 35 வயதான இந்துமதி மனோகரனும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஒன்றாக அமர்ந்து புத்தகங்கள் வாசிப்பது வழக்கம். ஒருவர் எழுதிய கதைகளை இன்னொருவர் படித்து விமர்சனம் செய்வது தம்பதியராக இவர்கள் விரும்பிச் செய்யும் செயலாகும்.
ஆறு வயது மகள் மகிழ்வதனிக்கும் மூன்று வயது மகள் கவின் மொழிக்கும் பெற்றோராக ஒதுக்கவேண்டிய நேரம் தவிர்த்து கிடைக்கும் நேரத்தை எல்லாம் துணையுடனே செலவழிக்கின்றனர் இந்தத் தம்பதியர். சரியான திட்டமிடலும் கைப்பேசி, சமூக வலைத்தளங்களில் செலவிடும் நேரத்தைத் தவிர்த்தாலே தம்பதி யருக்குள் நிறைய நேரம் கிடைக்கும் என்று கூறினார் இந்துமதி.

