காலை உணவின் முக்கியத்துவத்தை மருத்துவர்கள் தொடர்ந்து எடுத்துக்கூறி வருகின்றனர். ஆனால் காலை நேரப் பரபரப்பில் சமையலுக்கு அதிக நேரம் ஒதுக்க முடியவில்லை என்று சிலர் காரணம் கூறுகின்றனர்.
இவர்கள், காலை உணவுக்கு வித்தியாசமான சுவையில் எளிதில் தயாரிக்கக்கூடிய உணவுவகைகளை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளலாம். அத்தகையதொரு உணவுதான் 'மசாலா ஃபிரெஞ்சு டோஸ்ட்'. இதோ அதன் செய்முறை:
தேவையான பொருள்கள்:
ரொட்டித் துண்டு - 4,
முட்டை - 2,
எண்ணெய் / நெய் -
சிறிதளவு,
பால் - அரை கோப்பை,
வெங்காயம் - 1,
தக்காளி - 1,
பச்சை மிளகாய் - 2,
கொத்தமல்லித்தழை -
சிறிதளவு,
சாட் மசாலாத்தூள் -
அரை தேக்கரண்டி,
காய்ந்த மிளகாய்த்தூள் - அரை தேக்கரண்டி,
மிளகுத்தூள் -
அரை தேக்கரண்டி,
உப்பு- சுவைக்கேற்ப.
செய்முறை:
முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லித் தழை அனைத்தையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். இவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாகக் கலக்கிக்கொள்ளவும்.
ரொட்டித் துண்டுகளை முக்கோண வடிவில் நறுக்கிக்கொள்ளவும்.
வேறொரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி, நுரை வரும்வரை கலக்கவும். இந்தக் கலவையில் மிளகாய்த்தூள், மிளகுத்தூள், உப்பு அனைத்தையும் சேர்த்து நன்றாகக் கலந்துவிடவும்.
இதில் பாலை ஊற்றி மீண்டும் நன்றாக நுரைக்கும்படி கலக்கவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, சூடானவுடன் சிறிதளவு எண்ணெய் அல்லது நெய் தடவவும்.
ரொட்டித் துண்டுகளை, தயார் செய்துள்ள கலவையில் பிரட்டி எடுத்து தோசைக்கல்லின்மேல் வைக்கவும். இருபுறமும் சிவக்கும்வரை சுட்டு எடுக்கவும்.
ஒரே நேரத்தில் இரண்டிரண்டாக ரொட்டித் துண்டுகளை இவ்வாறு செய்யலாம்.
அனைத்தையும் சுட்டு எடுத்த பிறகு நறுக்கிய வெங்காயம், தக்காளி ஆகியவற்றை ரொட்டித்துண்டுகளின்மேல் பரப்பி, சாட் மசாலாத்தூள், கொத்தமல்லித்தழை ஆகியவற்றைத் தூவவும்.
இதைத் தக்காளி சாஸ் அல்லது கொத்தமல்லிச் சட்னியுடன் உண்ணலாம்.
தகவல், படம்: இணையம்

