மாதத்தின் இறுதி சனிக்கிழமை மாலையில் தேசிய நூலகத்தில் நிகழ்ச்சி படைக்கும் கவிமாலை அமைப்பு, ஆண்டுதோறும் சீனப் புத்தாண்டினை ஒட்டி, பேருந்துக் கவிமாலை என்ற நிகழ்ச்சியை நடத்திவருகிறது.
அந்த வகையில், இம்மாதம் 22ஆம் தேதி பேருந்துக் கவிமாலை நிகழ்ச்சி நடைபெற்றது. கவிமாலைக் கவிஞர்களும் அவர்களின் குடும்பத்தினரும் தேக்காவில் இருந்து கிளம்பி பேருந்து மூலம் ரைஃபிள் ரேஞ்ச் இயற்கைப் பூங்காவிற்குச் சென்றனர்.
பேருந்து பின்னர் லேப்ரடோர் பூங்காவைச் சென்றடைந்தது. ஏறத்தாழ 75 பேர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாக ஏற்பாட்டாளர்கள் கூறினர்.
மதிய உணவுக்குப்பின் தமிழ்சார்ந்த விளையாட்டுகளும் போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டன. மாலைச் சிற்றுண்டியுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.
வயது வேறுபாடின்றி அனைவரும் நிகழ்வுகளில் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஆரோக்கியமான போட்டித்தன்மைக்குப் பேருந்துதலாக அமைந்ததாகப் பங்கேற்றோர் கூறினர்.
மனங்களில் மகிழ்வுப் பூக்களை நிரப்பிக்கொண்ட கவிஞர்களுடன் மீண்டும் தேக்காவுக்குத் திரும்பியது பேருந்து.
கவிஞர்களை ஒருங்கிணைத்தல், கலகலப்பான விளையாட்டுகள் என ஏற்பாட்டுப் பணிகளில் கைகொடுத்தனர் கவிஞர்கள் சேவகனும் அ. பிரபா தேவியும்.
புதுமைத்தேனி மா. அன்பழகன், கவிமாலைத் தலைவர் இன்பா இருவரும் பேருந்துக் கவிமாலை நிகழ்ச்சியை வழிநடத்தினர்.
செய்தி: கவிமாலை

