பெற்றோர் தங்களின் பிள்ளைகள் அடையும் மைல் கல்களைப் பதிவுசெய்யும் பழக்கம் இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் பரவலாகவே உள்ளது.
"இன்று என் மகள் தன் 'ஓ' நிலை முடிவுகளைப் பெற்றுக்கொள்கிறார்," என்று அண்மையில் உள்ளூர் பிரபலம் ஒருவர் தம் மகளுடன் ஏற்பட்ட அனுபவத்தைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டார். ஆனால், தன் தேர்வு முடிவுகள் ஏமாற்றமாக இருந்ததால் அந்த மகள் கண்ணீர் விட்டார். அதையும் அந்தத் தாயார் பதிவுசெய்து, "முடிவை யாராலும் மாற்ற முடியாது. ஆனால் நம் செயல்பாடுகளை எண்ணிப் பார்த்து அடுத்த முறை மேலும் சிறப்பாகச் செய்யலாம்," என்று ஆறுதல் அளித்தார்.
இந்தக் காணொளி 'டிக்டாக்' தளத்தில் மிகப் பரவலாகப் பகிரப்பட்டது. மகளுக்கு ஆறுதல் கூறிய கூட்டத்தைக் காட்டிலும், மனமுடைந்து போயிருந்த அந்த மகளைக் காணொளிப் பதிவுசெய்த அந்த தாயாரை இணையவாசிகள் வெகுவாகச் சாடினர்.
பெற்றோர் என்ற நிலையில் நாம் நம் பிள்ளைகளைப் பற்றி சமூக ஊடக நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் அதேவேளையில் அளவுக்கு அதிகமான தகவல்களை நம்மை அறியாமலேயே நம் பிள்ளைகளைப் பற்றி கசியவிடுகிறோமா என்ற ஒரு சூழ்நிலை நிலவிவருகிறது.
சமூக ஊடகங்களில் இனிமையான நினைவுகளைப் பதிவுசெய்வதில் தவறில்லை என்று இக்காலப் பெற்றோர் எண்ணி இருக்க, பிள்ளைகளுக்கு இது ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்கின்றனர் நிபுணர்கள்.
இணைய அச்சுறுத்தல், தொந்தரவு அளித்தல், அடையாளத் திருட்டு போன்ற குற்றங்கள் நேர்வதற்கு இது வழிவிடலாம்.
இவ்வாறு அளவுக்கு அதிகமாகப் பெற்றோர் தங்கள் பிள்ளைகளைப் பற்றி பகிர்ந்துகொள்ளும் போக்கால் 2030ஆம் ஆண்டுக்குள் மூவரில் இரு இளையர்கள் அடையாள மோசடிக்கு ஆளாகலாம் என்று 2018ல் 'பார்கிலேஸ் பேங்க்' முன்னுரைத்தது.
பிள்ளைகள் கிடுகிடுவென வளர்ந்துவிடுவதால் நினைவலைகளைப் பதிவுசெய்வதற்கு இத்தகைய சமூக ஊடகத் தளங்கள் உதவுவதாகச் சிலர் கூறினாலும், மிகவும் முக்கியமான தகவல்கள் அந்தப் பதிவுகளில் வெளியிடப்பட்டால் அறிமுகமில்லாதவர்கள்கூட அந்தத் தகவல்களைத் தவறான முறையில் பயன்படுத்தலாம்.
'இதை நான் எதற்காக பதிவு செய்கிறேன்?' என்ற கேள்வியை முதலில் பெற்றோர் கேட்டுக்கொள்ள வேண்டும். பலரும் பார்த்து ஒரு 'லைக்' போட வேண்டும் என்பதற்காக மட்டுமே அந்தப் பதிவு என்றால், அப்பதிவால் ஏற்படக்கூடிய விளைவுகளைப் பெற்றோரும் பிள்ளைகளும் சந்திக்கத் தயாரா என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.
பிள்ளை பள்ளிக்குச் செல்லும் முதல் நாளன்று எடுக்கப்பட்ட ஒரு படத்தை பெற்றோர் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்வதன் மூலம் மற்றவர்களுக்கு அந்தப் பிள்ளையின் தோற்றம், பெயர், பள்ளி போன்றவற்றைப் பற்றிய விவரங்கள் தெரியவரும். இதனால் மோசடிகள் நிகழக்கூடும். எனவே, முக்கியத் தகவல்களை வெளியிடாத வண்ணம் பதிவுகள் இருத்தல் அறிவுறுத்தப்படுகிறது.
பிள்ளை வளர்ந்தபின், அந்தப் பதிவு அவருக்கு இனிமையான நினைவாக இருக்குமா என்பதை இனி எண்ணிப் பார்த்துவிட்டு பதிவுசெய்வதே சிறந்தது.
செய்தி: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
படம்: வெக்டீசி


