புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள சிங்கப்பூர் இந்திய இளையர் பல்லிய இசைக்குழு வரும் ஞாயிறன்று 'கான பிரகாசம்' எனும் தங்களது முதல் இசைக் கச்சேரியை படைக்கவுள்ளது.
பாடகர் குழுவுடன் தாள வாத்தியம், புல்லாங்குழல், வயலின், நவீன இசைக்கருவிகள் முதலியன இதில் இடம்பெறும்.
'அவர் தெம்பனிஸ் ஹப்'பில் மாலை 5 மணி அளவில் நடைபெறவுள்ள இக்கச்சேரியில் கர்நாடக சங்கீதம், இந்துஸ்தானி கலவை பாணியிலான இசையை மக்கள் ரசிக்கலாம்.
37 ஆண்டுகளாக இயங்கி வரும் சிங்கப்பூர் இந்திய இசைக்குழுவின் இளையர் பிரிவு 2022 ஏப்ரலில் தொடங்கப்பட்டது.
இந்த இசைக்குழுவின் நிறுவனரும் நடத்துநருமான திருமதி லலிதா வைத்தியநாதனும் மற்றொரு நடத்துநரான திருமதி விக்னேஸ்வரி வடிவழகனும் பல்வேறு சிங்கப்பூர் இசைப் பள்ளிகளில் பயிலும் இந்திய மாணவர்களை ஒருங்கிணைத்துள்ளனர்.
'கிராஸ்ரோட்ஸ்' எனும் சிறப்பு அங்கத்தில், கர்நாடக சங்கீத பாடல் ஒன்றைப் படைக்கும் சீன இளையரும் சீனப் புத்தாண்டு பாடல் பாடும் இந்திய இளையரும் இடம்பெறுவர்.
நவீன இசைக்கருவிகளை இணைத்து மாறுபட்ட பாணியிலான இசையும் நிகழ்வில் படைக்கப்படும் என்றார் திருமதி லலிதா.
"இளையர்களுக்கு ஏற்ற தளம் அமைத்துக்கொடுக்க இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளோம்.
"இதுவரை எங்களிடம் உள்ள 200க்கும் மேற்பட்ட இசைத்தொகுப்புகளை அடுத்த தலைமுறையினருக்கு அளிக்கவும் விரும்பினோம்," என்றார் அவர்.
தற்போது இந்த இசைக் குழுவில் ஏறத்தாழ 30 இளையர்களும் 5 நடத்துநர்களும் உள்ளனர்.
பதின்ம வயதில் இந்த இசைக்குழுவில் இணைந்த திருமதி விக்னேஸ்வரி, அடுத்த தலைமுறையினரையும் இசைக்குழுவின் பயணத்தில் இணைக்க இந்த இளையர் பல்லிய இசைக்குழு வழிவகுக்கும் என்றார்.
இந்திய இசை ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து இசை ரசிகர்களும் நிகழ்வுக்கு வருவர் என்றும் பார்வையாளர்கள் தங்களது புதுமையான முயற்சிகளுக்கு ஆதரவளிப்பர் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.