எவ்வளவு புரட்டி போட்டாலும் மீண்டும் எழுந்தார் டிரினிட்டி

எவ்வளவு புரட்டி போட்டாலும் மீண்டும் எழுந்தார் டிரினிட்டி

3 mins read
5ff2a978-fb6c-4b64-9d9f-f3e13715b98d
-

கீமோதெரபி சிகிச்சையின் பக்க விளைவுகளின் காரணங்களால், மூன்று முறை மண்டை ஓட்டில் சிகிச்சைக்குச் சென்ற 19 வயது ஸ்வஸ்தி டிரினிட்டி கோவிந்த ராஜன், தற்போது நம்மை வியப்பில் ஆழ்த்தும் வகையில் சிங்கப்பூர் துப்பாக்கிச் சுடும் சங்கத்தில், துப்பாக்கிச் சுடுதலில் பயிற்சிகளை மேற்கொள்கிறார்.

பத்து ஆண்டுகளுக்கு முன், ஒன்பது வயதில் கொடிய நோய் அவரின் வாழ்க்கையைப் புரட்டி போட்டது. அடிக்கடி சோர்வடைந்துக்கொண்டே இருந்த இவருக்கு, திடீரென ஒரு முறை காய்ச்சலும், மார்பு பக்கம் வீக்கமும் ஏற்பட்டது.

ஆரோக்கியமாகப் பிறந்த குழந்தைக்கு உடலில் வழக்கத்துக்கு மாறான மாற்றம் தென்பட்டதும், பெற்றோர்கள் இருவரும் பதற்றத்தோடு குடும்ப மருந்தகத்திற்கு விரைந்தனர். ரத்தப் பரிசோதனையில், எதிர்பாராதவிதமாக, டிரினிட்டியின் ரத்தத்தில் புற்றுநோய் அணுக்கள் அதிகமாக தென்பட்டன.

கேகே மகளிர், சிறார் மருத்துவமனையில் மேற்கொண்ட ரத்தப் பரிசோதனைகளின் முடிவில், டிரினிட்டிக்கு, 2013ஆம் ஆண்டு, 28 ஜூனில் தீவிர லிம்போசைடிக் லுகேமியா (Acute lymphocytic leukemia) எனும் ரத்த புற்றுநோய் இருப்பது உறுதியானது.

ஒன்பது வயது டிரினிட்டிக்கு, தன் உடலில் என்ன நடக்கிறது என்று எதுவும் தெரியவில்லை. டிரினிட்டிக்கு ஏற்பட்ட துரதிருஷ்டத்துக்கு, கீமோதெரபி மட்டுமே தீர்வாக இருந்தது. ஒரு வாரத்திற்கு இரண்டிலிருந்து மூன்று முறை கீமோதெரபி சென்றார் டிரினிட்டி.

கீமோதெரபிக்குத் தேவைப்படும் மருந்துகள் ஊசி மூலம் தன்னுடைய வலது கையில் இருக்கும் நரம்புகளில் ஏற்றப்பட்டன. வலி தாங்க முடியாத டிரினிட்டி, ஓவ்வொரு முறையும் ஊசி நரம்புக்குள் ஏறிய போது, கதறி அழுததை நினைவுகூர்ந்தார்.

மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த டிரினிட்டி, நோய்வாய்ப்பட்ட காரணங்களால் பள்ளிக்குத் திரும்பவில்லை. கீமோதெரபியினால், வாந்தி எடுப்பது, முடி உதிர்வது, கை, கால் நகங்கள் கருநிறமானது ஆகியவை டிரினிட்டிக்கு வழக்கமாகியது.

கீமோதெரபியின் காரணங்களால், டிரினிட்டியின் நோயெதிர்ப்பு சக்தி வெகுவாக குறைந்தது. இதன் காரணமாக அவருடைய மூளையில், பூஞ்சை தொற்று ஏற்பட்டது. பூஞ்சை தொற்றின் காரணமாக டிரினிட்டியின் இடது பெருமூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது. ரத்தக்கசிவு அவருடைய அசைவுகளைப் பாதித்தது.

மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவால் டிரினிட்டியின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அபாயம் இருந்ததால், அவர் அவசரமாக சிகிச்சைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். சிகிச்சையின் போது, இடது மூளையிலிருந்து ரத்த கட்டிகள் அகற்றப்பட்டன.

முதல் சிகிச்சைப் பலன் அளிக்காததால், டிரினிட்டிக்கு மூன்று முறை மண்டை ஓட்டில் சிகிச்சைகள் நடைபெற்றன. அதன் காரணமாக அவருடைய மண்டை ஓடு அகற்றப்பட்டு, அதற்குப் பதிலாக மருத்துவர்கள் டைட்டானியம் தட்டை பொருத்தினார்கள். டிரினிட்டிக்கு இப்பொழுது, அந்த டைட்டானியம் தட்டு தான் மண்டை ஓடாக செயல்படுகிறது.

மூன்று முறை மூளை சிகிச்சைக்குச் சென்ற டிரினிட்டி, துவண்டுபோனாலும் மனம் தளராமல் போராடினார். சிகிச்சையினால் டிரினிட்டியின் வலது பக்கம் முழுமையாக செயலிழந்து விட்டது. மேலும், இதற்கு முன்னர் வலது கைப் பழக்கம் கொண்ட டிரினிட்டி, இடது பக்கத்திற்கு மாற வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இளம் வயதில், ஒருவர் தாங்க முடியாத அளவிற்கு அத்தனை யையும் எதிர்நோக்கிய டிரினிட்டிக்கு, அவருடைய பெற்றோரும் இரண்டு மூத்த சகோதரிகளும் தம்பியும் பக்கப் பலமாக இருந்தனர். (படத்தில் தாயார் எஸ்தருடன் டிரினிட்டி)

"இந்த உலகில் நமக்கு எந்த பிரச்சனை வந்தாலும், துவண்டுவிடக்கூடாது. என்னை போல சிறுவர்கள் புற்றுநோயால் பாதிப்படைந்திருப்பார்கள். நான் இவ்வளவு தூரம் போராடியதால், இன்று நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். புற்றுநோய் ஒரு கொடிய நோயாக இருந்தாலும், நாம் மன வலிமையோடு மீண்டு வர வேண்டும்," என்று கூறினார் டிரினிட்டி.