பொன்மணி உதயகுமார்
படிப்பு, வாழ்க்கைமுறை, வேலை, தனிப்பட்ட வாழ்க்கை என்று அனைத்துப் பரிமாணங்களிலும் ஒருவர் திட்டமிடுவதன் அவசியத்தை எடுத்துரைக்கும் 'எதிர்காலம்' நாட்டிய நாடகம் மேடையேற உள்ளது. இளையர்கள் சிலரின் முதல் பெரிய அளவிலான படைப்பு இது.
'சிவாஸ் புரோடக்ஷன்ஸ்' தயாரிப்பில் இம்மாதம் 10ஆம் தேதி, எண் 1, சார்க்கீஸ் ரோட்டில் உள்ள 'அலாயன்ஸ் பிராங்கே' (Alliance Francaise) அரங்கத்தில் நாட்டிய நாடகம் நடைபெறும். அதற்கான அனுமதி இலவசம்.
பள்ளி மாணவர்களுக்காகப் பிற்பகல் 3 மணிக்கும் பொதுமக்களுக்காக இரவு 7 மணிக்கும் நாடகம் அரங்கேற்றப்படும்.
ஏறத்தாழ 50 பேரின் ஒருங்கிணைந்த முயற்சியால் அப்படைப்பு உருவாகியுள்ளது. எட்டு வயது முதல் 40 வயது வரையிலான எட்டு நடிகர்கள் அதில் அங்கம் வகிக்கின்றனர்.
'ஸும்பா', பரதநாட்டியத்துடன், கோலாட்டம், பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், ஒயிலாட்டம் போன்ற பாரம்பரிய நடன வடிவங்கள் அரங்கேறும். பாலர்பள்ளி முதல் ஆண்டிலிருந்து தொடக்கநிலை ஐந்து வரை பயிலும் மாணவர்கள், வனவிலங்குகள் போல வேடமிட்டு நடனமாடுவர்.
தயாரிப்பு நிறுவனத்தின் இயக்குநரான சிவபிரிவீணா நடனங்களை வடிவமைத்துள்ளார். நடனத்தில் 'அனஸ்ஃபா' எனும் 'ஆர்ட் அண்ட் ஆர்ட்டிஸ்ட்' இந்திய நுண்கலைப் பள்ளியின் மாணவர்கள் பங்கேற்றுள்ளதாக அவர் கூறினார்.
கணேசன் பகவதியின் இசையில் ராஜூ இளஞ்சரணின் வரிகளில் துடிப்புமிக்க பாடல் ஒன்றும் இடம்பெறும் என்றார் அவர்.
இதுவரை சமூக மன்றங்களில் மார்க்கண்டேயன், ராமாயணம் போன்ற நாடகங்களை அரங்கேற்றிய இக்குழு, முதல்முறையாக பெரிய அளவிலான படைப்பைத் தயாரித்துள்ளதாக சிவபிரிவீணா குறிப்பிட்டார்.
நாடகத்தில் மற்றொரு நாடகமும் இருக்கும். தற்காலமும் பழங்காலமும் அடங்கிய காட்சிகளில் பழங்காலக் காட்சிகளில் நவீன சமூகச்சூழலைப் பொருத்தி அலசவுள்ளது படைப்புக் குழு.
இன்றைய சூழலில் இளையர்கள் வருங்காலம் குறித்து அதிகம் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகக் கூறினார் சிவபிரிவீணா.
அதையொட்டி, புத்தாக்கமிக்க காட்சிகளின் மூலம் எதிர்காலத்துக்குத் திட்டமிடுவதன் அவசியத்தைப் பார்வையாளர்களுக்கு உணர்த்துவது 'எதிர்காலம்' நாட்டிய நாடகத்தின் கருப்பொருள் ஆகும்.
மேல்விவரமறிய, 'ஃபேஸ்புக்', 'இன்ஸ்டகிராம்', அல்லது 81699928 என்ற கைபேசி எண்வழியாக 'சிவாஸ் புரோடக்ஷன்ஸ்' நிறுவனத்தை நாடலாம்.

