வேறு மருத்துவ சிக்கல்கள் இல்லாதபோது அடிக்கடி ஏற்படும் சிறுநீர்ப்பாதைத் தொற்று, ஒருவரின் அன்றாட வாழ்வை பாதிக்கும் என்று அமெரிக்க ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
குறிப்பாகப் பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கை, தொழில் ஆகியவற்றை அத்தொற்று பாதித்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தைக் குறைக்கலாம் என்று அந்த ஆய்வு தெரிவித்தது. பிளோஸ் ஒன் எனும் அமெரிக்க அறிவியல் சஞ்சிகையில் ஆய்வு முடிவுகள் வெளியிட்டப்பட்டுள்ளன.
சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் அல்லது வலி ஏற்படுவது, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, தேவையில்லாதபோதும் சிறுநீர் கழிக்கவேண்டும் என்று உணர்வது, சிறுநீரில் ரத்தம் இருப்பது, கீழ் முதுகில் அல்லது பக்கவாட்டில் வலி, வாந்தி, குமட்டல் போன்றவை சிறுநீர்ப் பாதைத் தொற்றின் சில அறிகுறிகள் ஆகும்.
சிறுநீர்ப் பாதைத் தொற்று ஆறு மாதங்களில் இரண்டு முறை அல்லது 12 மாதங்களில் மூன்று முறை ஏற்பட்டால் அதை அடிக்கடி நிகழும் தொற்றாக அமெரிக்க சிறுநீரகவியல் சங்கம் கருதுகிறது.
அமெரிக்காவில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட 375 பெண் களின் தகவல்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
அவர்களில் 43 விழுக்காடு பெண்களுக்கு மருத்துவச் சிக்கலுடன் தொடர்பில்லாத சிறுநீர்ப் பாதைத் தொற்று அடிக்கடி நிகழ்வதாக அடையாளம் காணப்பட்டது.
தூக்கம் முதல் தொழில்வரை
அத்தொற்றால் பாதிக்கப்பட்ட 67 விழுக்காடு பெண்களின் தூக்கம் கெட்டது என்று ஆய்வில் தெரியவந்தது. கிட்டத்தட்ட 61 விழுக்காட்டுப் பெண்கள் பாலியல் உறவில் சிக்கல் ஏற்பட்டது.
ஏறத்தாழ பாதி பேர், உடற்பயிற்சி, வீட்டுவேலை போன்றவையும் நண்பர்களுடன் செலவிடும் நேரமும் பாதிக்கப்பட்டதாகக் கூறினர்.
அத்துடன் அடிக்கடி நிகழும் சிறுநீர்ப் பாதைத் தொற்று வேலைச் செயல்திறனையும் குறைத்ததாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவித்தன. மருத்துவரைச் சென்று பார்த்து ஆன்டிபயோடிக் எனப்படும் நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளை வாங்கிச் சாப்பிட்டதன் மூலமும் வேலைக்குச் செல்ல முடியாததன் மூலமும் ஆய்வு செய்யப்பட்ட பெண்கள் பணத்தை இழந்தனர்.
பெண்களுக்கு வழக்கமாக ஏற்படும் சிறுநீர்ப் பாதைப் பிரச்சினையால் அவர்களுக்கு ஏற்படும் சுமையை எடுத்துக்காட்டியதன்வழி அந்த ஆய்வு முக்கியமானது, என்று பிரின்ஸ்டன் மகளிர் சுகாதாரப் பராமரிப்பின் மருத்துவ இயக்குநர் மரியா சோஃபக்கல்ஸ் கூறினார்.
மேலும், சிறுநீர்ப் பாதைத் தொற்று ஏற்படும்போது மருத்துவர்கள் சிறுநீர் மாதிரியை ஆய்வு செய்வதுடன், ஆய்வுக்கூடத்தில் திசு மாதிரிகளை ஆய்வு செய்வது முக்கியம் என்று டாக்டர் சோஃகல்ஸ் கூறினார். அதன் வழியாகத்தான், எவ்வகை நுண்ணுயிர்களால் தொற்று ஏற்பட்டுள்ளது என்பதைத் துல்லியமாகத் தெரிந்துகொண்டு அதற்கேற்ற சரியான நுண்ணுயிர்க் கொல்லி மருந்தை வழங்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
தொற்றைத் தடுக்க வழிகள்
ஓஹாயோ மாநிலப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் கோர்ட்னி மூர், சிறுநீர்ப் பாதைத் தொற்றைத் தடுக்க சில பரிந்துரைகளை முன்வைத்ததாக ஹெல்த்லைன் இணையச் சஞ்சிகை கூறியது.
கழிவறையில் சுத்தம் காப்பது அவற்றில் ஓன்றாகும். அத்துடன் சிறுநீர்ப்பை நிரம்பும் வரை தண்ணீர் அல்லது வேறு திரவம் குடித்த பின்னர் சிறுநீர் கழிப்பது நல்லது என்ற டாக்டர் மூர், சிறுநீரில் உள்ள நுண்ணுயிர்களை வெளியாக்க அது உதவும் என்று குறிப்பிட்டார்.
அத்துடன், தினமும் 1000 மிலிகிராம் வைட்டமின் 'சி' உயிர்ச்சத்து அல்லது கிரான்பெரி துணை உணவுப் பொருளை உட்கொள்ளலாம் என்று அவர் பரிந்துரைத்தார். அது சிறுநீரில் அமிலத்தன்மையைக் கூட்டி, நுண்ணுயிர்களை அழிக்க உதவும் என்று அவர் சொன்னார்.
சிறுநீர்ப் பாதைத் தொற்றின் அறிகுறிகள் தென்படத் தொடங்கும்போதே நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் டாக்டர் மூர் குறிப்பிட்டார். நுண்ணுயிர்கள் சிறுநீரிலிருந்து கழிய இது சிறந்த வழிகளில் ஒன்று என அவர் கூறினார்.
அத்துடன் வயிற்றுக்கோளாறு ஏற்படுவதைத் தடுத்தால், சிறுநீர்ப் பாதைத் தொற்று ஏற்படும் அபாயத்தைச் சற்று குறைக்கலாம் என்று டாக்டர் மூர் கூறினார்.
மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்பட்டால் ஆசனவாய்வழி சிறுநீர்ப்பைக்குள் நுண்ணுயிர்கள் செல்லும் அபாயம் கூடலாம் என்று அவர் விவரித்தார்.

