என்பிஎஸ் அனைத்துலகப் பள்ளியின் என்பிஎஸ் தமிழ் இமயம் விழா 2023 இவ்வாண்டு ஆறாவது முறையாக நடைபெற உள்ளது. 'விழாவில் சொல்! வெல்!' என்ற பேச்சுப் போட்டியும் 'குறளின் குரல்' என்ற திருக்குறள் போட்டியும் இம்மாதம் 18ஆம் தேதி காலை ஒன்பது மணிக்கு நடைபெறும்.
போட்டிகளுக்கு இம்மாதம் 12ஆம் தேதிக்கு முன்பு https://forms.gle/j7hVv3SfhD1f4ocN6 என்ற இணைப்பின்மூலம் மாணவர்கள் பதிவு செய்துகொள்ளலாம். மேல் விவரங்களுக்கு 9007 4523 எனும் எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
எண் 95 ஜாலான் யூனோஸ் சாலையில் என்பிஎஸ் அனைத்துலகப் பள்ளியின் உயர்நிலை பள்ளி வளாகத்தில் போட்டி நடைபெறும்.
இளையர்களிடையே தமிழ் மொழிப் புழக்கத்தையும் மொழிமீது அவர்களுக்குள்ள ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் வளர்க்க புத்தாக்க முறையில் கடந்த ஐந்து ஆண்டுகளாகப் போட்டிகளை நடத்திவருவதாகப் பள்ளி குறிப்பிட்டது.
இரண்டு போட்டிகளிலும் இரண்டு பிரிவுகளில் மாணவர்கள் பங்குபெறலாம். பிரிவு ஒன்றில் உயர்நிலை 1-2 மாணவர்களும் அனைத்துலகப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்புவரை பயிலும் மாணவர்களும் கலந்துகொள்ளலாம். பிரிவு இரண்டில் உயர்நிலை 3-4 மாணவர்களும் அனைத்துலகப் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பிலிருந்து 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களும் பங்கு பெறலாம்.
'சொல்! வெல்!' போட்டியின் பிரிவு 1இன் தலைப்பு "இன்றைய இளையர்கள் தம் பண்பாட்டை நன்கு அறிந்துள்ளனர்/இல்லை" என்பதாகும். பிரிவு 2இன் தலைப்பு "பகுதிநேர வேலைக்குச் செல்வதால் மாணவர்கள் பொறுப்புணர்வோடு இருக்கின்றனர்/இல்லை" என்பதாகும்.
ஒவ்வொரு பேச்சாளருக்கும் இரண்டு நிமிடங்கள் கொடுக்கப்படும். முதல் நிமிடத்தில் கொடுக்கப்பட்டுள்ள தலைப்பை ஒட்டியும் இரண்டாவது நிமிடத்தில் தலைப்பை வெட்டியும் பேச வேண்டும்.
'குறளின் குரல்' திருக்குறள் போட்டியின் பிரிவு 1இல் அழுக்காறாமை, வெஃகாமை, கல்வி, அவையஞ்சாமை, ஒப்புரவறிதல் ஆகிய அதிகாரங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். பிரிவு 2இல் நடுநிலைமை, தீவினையெச்சம், கல்லாமை, குற்றங்கடிதல், இடனறிதல் ஆகிய அதிகாரங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.
ஒரே சுற்றில் நடத்தி முடிக்கப்படும் இரு போட்டிகளிலும் மதிப்பெண்களின் அடிப்படையில் முதல் மூன்று நிலையில் உள்ள பள்ளிகளுக்குப் பரிசுகள் வழங்கப்படும்.

