ஆ. விஷ்ணு வர்தினி
நவீன, பாரம்பரிய, கலவை பாணியிலான இசை முழங்கிய ஒரு நிகழ்ச்சியாக 'கான பிரகாசம்' கச்சேரி அமைந்தது. புதிதாக அமைக்கப்பட்ட சிங்கப்பூர் இந்திய இளையர் பல்லியல் இசைக்குழு கடந்த ஞாயிறன்று படைத்த இக்கச்சேரி, 'அவர் தெம்பனிஸ் ஹப்'ல் ஏறத்தாழ 350 பார்வையாளர்களின் முன்னிலையில் நடந்தேறியது.
வீணை, வயலின், மிருதங்கம் முதலிய வாத்தியக் கலைஞர்கள், பாடல் குழுவினர் உட்பட 30 இளையர்கள் நிகழ்ச்சியைப் படைத்தனர். 'கான பிரகாசம்' என்ற தங்களின் முதல் இசைப் படைப்புக்காக பல மாதம் பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளனர். ஒன்றரை மணி நேரம் நீடித்த இக்கச்சேரியில் 10 பாடல்கள் இடம்பெற்றன.
குறிப்பாக, 20ஆம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் வந்தடைந்தோரின் பயணத்தை விவரிக்கும் 'கடலின் மீது' எனும் குரல் இசை படைப்பு சிறப்பங்கமாக அமைந்தது.
திருமதி லட்சுமி பாலகிருஷ்ணனின் வரிகள், திருமதி ராதா விஜயனின் இசையமைப்பு, ஆகியவற்றுடன் திருமதி விக்னேஸ்வரி வடிவழகன் பாடலுக்கான குரல் அமைப்புகளை வகுத்திருந்தார். 'கிராஸ்ரோட்ஸ்' என்ற தலைப்பிலான சீன-இந்திய படைப்பும் மக்களைக் கவர்ந்தது.
இசைக்குழுவில் மிருதங்கம் வாசித்து வரும் 22 வயது அனிருத் பாலசுப்ரமணியம், இசை வல்லுநர்களிடம் இருந்து நேரடியான வழிகாட்டுதல் பெற்றதை நல்ல அனுபவமாகக் கருதினார். இசைத்துறையில் அனுபவம் கொண்ட ஐந்து பயிற்றுவிப்பாளர்கள் இளையர்களுக்கு இப்படைப்புக்கான பயிற்சியில் வழிகாட்டினர்.
"வாத்தியங்களும் பாடகர் குழுவும் இணைந்து செயல்படுவதில் உள்ள சிக்கல்களைப் புரிந்துகொண்டேன். கடுமையான பயிற்சி மேற்கொண்டு ஒரு குழுவாக ஒன்றிணைந்தோம். இதுபோன்ற ஒரு தளத்தில் இசை படைத்தது தன்னம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது," என்றார் அவர்.
முதல்முறையாக குழுசார்ந்த ஓர் இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளதாக 13 வயது பாடகர் ரேனா சுரேஷ் குமார் பகிர்ந்துகொண்டார். எட்டு ஆண்டுகளாக இசை பயின்று வரும் இவர், இந்த இசைப் பயணத்தில் சக குழு உறுப்பினர்களுடன் நல்லுறவை வளர்த்துக்கொண்டதில் மகிழ்ச்சி தெரிவித்தார்.
சிங்கப்பூர் பல்லியல் இசைக்குழுவின் நிறுவனரும் நடத்துநருமான திருவாட்டி லலிதா வைத்தியநாதன், இக்குழு கடந்த 37 ஆண்டுகளில் சேகரித்துள்ள வளங்களையும் அனுபவங்களையும் பயனுள்ள முறையில் அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்லவேண்டும் என்ற நோக்கில் இசையார்வம் கொண்ட இளையர்களை இத்தளத்தில் ஒன்றிணைத்துள்ளதாகக் கூறினார்.

