அன்பு மழை அனைவர்க்கும் பொது

அன்பு மழை அனைவர்க்கும் பொது

2 mins read

ரச்­சனா வேலா­யு­தம்

அன்­பர் தினம் ஆண்­டு­தோ­றும் பிப்­ர­வரி 14ல் கடைப்­பி­டிக்­கப்­ப­டு­வது நாம் அறிந்­தது. அதற்கு அடுத்த நாளான இம்­மா­தம் 15ஆம் தேதிக்கு ஒரு சிறப்பு உண்டு.

'சிங்­கிள்ஸ் அப்­ரி­சி­யே­ஷன் டே' எனப்­படும் இந்­நாள், நம்­மைச் சுற்­றி­யி­ருப்­போர்­மேல் அன்­பும் பாச­மும் காட்ட நினை­வு­ப­டுத்­து­கிறது.

நண்­பர்­கள், குடும்­பத்­தி­னர், உற­வி­னர் என்­றில்­லா­மல் ஒரு­வர் தன்­மே­லும் முறை­யான அன்­பைச் செலுத்­த­வேண்­டும் என்று இது வலி­யு­றுத்­து­கிறது.

தொற்­று­நோய்ப் பர­வ­லுக்­குப்­பின் வழக்­க­நிலை பெரும்­பா­லும் மீண்­டுள்ள இவ்­வே­ளை­யில், இதைக் கொண்­டா­டப் பல­வ­கை­யான நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­ட­லாம். ஒரு மாற்­றத்­திற்­காக இது­வரை சுவைத்­தி­ராத சமை­யல் வகையை உண்டு பாருங்­கள்.

சிங்­கப்­பூ­ரில் ஆசிய, மேற்­கத்­திய உண­வு­க­ளு­டன் துருக்கி, அரே­பியா, லெப­னான், ஈரான் உள்­ளிட்ட மத்­திய கிழக்கு நாடு­க­ளின் உண­வு­வ­கை­கள்­கூட கிடைக்­கின்­றன. இவற்­றைத் தேடிச் சுவைக்­க­லாம்.

கொவிட்-19 கிரு­மிப் பர­வல் தொடர்­பான கட்­டுப்­பா­டு­க­ளால் கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக அதி­கம் பார்க்க இய­லாத நண்­பர்­க­ளோடு சேர்ந்து விருந்­துண்­ண­லாம்.

கைம­ணம் உள்­ள­வர்­கள் வீட்­டி­லேயே சமைத்து விருந்து படைக்­க­லாம். எப்­போ­தும் உண்­ணும் உண­வு­வ­கை­க­ளுக்­குப் பதில் வேறு­பட்ட சுவை­யில், மணத்­தில் சமைப்­பது மனத்­துக்­கும் இத­ம­ளிக்­கும்.

புதி­தாக ஏதா­வது கைவி­னைப் பொருள் செய்­யவோ கலை­யைக் கற்­கவோ இந்த நாளில் தொடங்­க­லாம். எடுத்­துக்­காட்­டாக, தற்­போது மண்­பாண்­டம் செய்­யும் வகுப்­பு­களில் சிலர் சேர்­கி­றார்­கள்.

நண்­பர்­கள் ஒரு குழு­வா­கவோ தனி­யா­கவோ இத்­த­கைய வகுப்­பு­களில் சேர்ந்து பயி­ல­லாம். ஓவிய வகுப்­பு­களில் சேர­லாம். உட­லும் மன­மும் புத்­து­ணர்ச்சி பெற இது உத­வும்.

மன­உ­ளைச்­ச­லைப் போக்க உடற்­பி­டிப்­புக்­குச் செல்­ல­லாம். கூடு­த­லாக, உங்­கள் முகத்­திற்­குப் பொலி­வூட்­டும் முகப் பரா­ம­ரிப்­புச் சேவை­யை­யும் நாட­லாம்.

அழகு நிலை­யத்­திற்­குத்­தான் செல்ல வேண்­டும் என்­றில்லை. வீட்­டி­லேயே நறு­ம­ணம் தரும் மெழு­கு­வர்த்­தி­களை ஏற்றி, முகத்­திற்­குப் பொலி­வூட்­டும் கல­வை­யைப் பூசி­ய­படி, பிடித்த திரைப்­படத்­தைப் பார்க்­க­லாம்.

பழைய திரைப்­ப­டங்­கள், வேற்று­மொ­ழிப் படங்­கள் என வித்­தி­யா­ச­மா­கத் தேர்வு செய்­து பார்க்கலாம்.

திரை­ய­ரங்கு செல்­வோர் ஒரு மாற்­றத்­திற்கு அனைத்­து­ல­கப் படங்­க­ளைப் பார்க்­க­லாம்.

வெளியே செல்­லப் பிடிக்­கா­த­வர்­கள், குடும்­பத்­து­டன் அல்­லது நண்­பர்­க­ளு­டன் வீட்­டி­லேயே நேரம் செல­வி­ட­லாம்.

சிரித்து, பழங்­க­தை­கள் பேசும்­வே­ளை­யில், மனக்­க­வ­லை­கள் பஞ்­சாய்ப் பறந்­து­வி­டும். அல்­லது தனி­மை­யி­லும் அவ­ர­வர் வாழ்­வின் சிறந்த பக்­கங்­க­ளைப் புரட்­டிப் பார்த்து பெரு­மி­தம் கொள்­ள­லாம்.

வாழ்க்­கைத்­து­ணை­மீது செலுத்­தும் அன்பு மட்­டுமே கொண்­டாட்­டத்­துக்கு உரி­யது என்­றில்லை. அதே­போல், அன்னை, தந்தை, உடன்­பி­றந்­தோர், நண்­பர்­கள் ஆகி­யோ­ருக்கு இடை­யி­லான அன்புதான்

சிறந்­தது என்­றில்லை.

இந்த வரை­ய­றை­க­ளுக்கு அப்­பா­லும் செலுத்­தக்­கூ­டி­யது அன்பு.

நேசம் என்­பது மானு­டம் என்ற எல்­லை­யை­யும் கடந்து அனைத்து உயி­ரி­னங்­க­ளோ­டும் தொடர்­பு கொள்ள உத­வும் மொழி.

பேத­மின்றி யாவ­ரை­யும் நனைக்­கும் மழை­யைப்­போல் அது அனை­வர்க்­கும் பொது.