ஆங்கர்வேல் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவின் ஏற்பாட்டில் பொங்கல் விழாவை முன்னிட்டு இம்மாதம் 5ஆம் தேதி பல்வேறு கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியைத் தொடர்ந்து, ஆடல், பாடல் நிகழ்ச்சிகள், சிறுவர்களின் சிலம்பாட்டம், பெண்களின் கும்மியாட்டம் முதலிய பாரம்பரிய நிகழ்ச்சிகளில் மக்கள் பங்குபெற்று மகிழ்ந்தனர்.
செங்காங் மேற்குத் தொகுதி குடியிருப்பாளர்கள் 300க்கு மேற்பட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
சிறப்புப் பட்டிமன்றத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பிள்ளைகளை நற்பண்புடையவர்களாக வளர்க்க, பெரிதும் பின்பற்ற வேண்டியது கண்டிப்பான அணுகுமுறையா? கனிவான அணுகுமுறையா? என்ற தலைப்பில் முனைவர் மன்னை ராஜகோபாலன் நடுவராகச் செயல்பட்ட கலகலப்பான பட்டிமன்றம் நடைபெற்றது.
இன்றைய சமூகச் சூழலில் பிள்ளைகள் திசைமாறிப் போகாமல் நேர்மையோடு இருக்க 'கண்டிப்பான அணுகுமுறையே!' சிறந்தது என்று திருமதி ஸ்வர்ணலதா ஆவுடையப்பன் தலைமையில், திரு சிலம்பரசன் பருசப்புலி, திருமதி வானதி பிரகாஷ் ஆகியோர் பங்குபெற்ற அணி வாதிட்டது.
திருமதி கோவிந்தராஜு சுமதி தலைமையில், திரு இராமன் குருந்தலிங்கம் நிர்மல், செல்வி மோகன் ஹரிவர்த்தினி அணியினர், கனிவான அணுகுமுறையே சிறந்தது என வாதிட்டனர்.
பிள்ளைகள் பெற்றோருடன் அணுக்கமான உறவுகளை வளர்த்துக்கொண்டு தன்னம்பிக்கை உடையவர்களாகத் திகழ்வதற்கு கனிவான அணுகுமுறையே சிறந்தது என்பதை அவர்கள் முன்வைத்தனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நடுவர், இன்றைய போட்டித்தன்மை வாய்ந்த உலகில் பல சவால்களை எதிர்நோக்கும் பிள்ளைகளுக்கு பெற்றோர்களின் கனிவான அணுகுமுறையே துணைபுரியும் என்று தீர்ப்பு வழங்கினார்.
விழாவின் சிறப்பு விருந்தினராக செங்காங் குழுத்தொகுதி அடித்தள அமைப்புகளின் ஆலோசகரான டாக்டர். லாம் பின் மின் கலந்துகொண்டார்.
பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆங்கர்வேல் சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுத் தலைவர் பொ. சந்திரசேகரும் செயலவை உறுப்பினர்களும் முன்நின்று நடத்தினர்.

