அல்ஜுனிட், ஹவ்காங் கோலாகலப் பொங்கல்

2 mins read
dfd7898b-3ab4-49c3-97b5-8635c1717841
-

சபிதா ஜெய­கு­மார்

பொங்­கல் திரு­நாளை முன்­னிட்டு ஜன­வரி 29ஆம் தேதி ஹவ்­காங் ரயில் நிலை­யத்­தின் அருகே உள்ள திறந்­த­வெ­ளி­யில் பொங்­கல் கொண்­டாட்ட நிகழ்ச்சி நடை­பெற்­றது.

அல்­ஜு­னிட், ஹவ்­காங் என இரண்டு இந்­தி­யர் நற்­பணிச் செயற்­குழுக்­கள் இணைந்து மூவாண்­டு­க­ளுக்­குப்பின்­ ஏற்­பாடு செய்த ­விழா­வுக்கு சிங்­கப்­பூர் இந்­தி­யர் மேம்­பாட்­டுச் சங்­க­மும் 'ஹார்­மனி சர்க்­கிள்' அமைப்­பும் ஆத­ர­வ­ளித்­தன.

பல இனங்­க­ளை­யும் சேர்ந்த கிட்­டத்­தட்ட ஆயி­ரம் குடி­யி­ருப்­பா­ளர்­கள் இதில் கலந்­து­கொண்டு பாரம்­ப­ரிய முறை­யில் பொங்­கல் வைத்­தும் உறி­ய­டித்­தும் கோல­மிட்­டும் கோலா­க­ல­மாக பொங்­கலைக் கொண்­டா­டி­னர்.

பாரம்­ப­ரிய, நவீன நட­னங்­களும் பல்­சுவை நிகழ்ச்­சி­களும் நிகழ்­வுக்கு சுவைகூட்­டின. குறிப்­பாக, நாட்­டுப்­புற இசைக்­க­லை­ஞர்­க­ள் படைத்த கச்­சேரி மக்­களை ஈர்த்­தது.

பொங்­கல் பண்­டிகை குறித்த புரி­தலை ஆழ­மாக்­கும் நோக்­கு­டன் இவ்­வாண்­டின் விழா பெரிய அள­வில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­த­தாகக் கூறினார் ஹவ்­காங் சமூக மன்ற இந்­தி­யர் நற்­ப­ணிச் செயற்­கு­ழு­வின் தலை­வ­ர் ராஜ­மோ­கன், 62.

நிகழ்­வில் உரை­யாற்­றிய அடித்­தள அமைப்புகளின் ஆலோ­ச­கர் விக்­டர் லாய், "பல்­லி­னத்­த­வர் வாழும் சிங்­கப்­பூ­ரில் பிற இனத்­த­வ­ரின் வழக்­கங்­க­ளைப் பாராட்டி ஒற்­று­மை­யாக வாழ்­வது அவ­சி­யம்," என்று கூறி­னார்.

விழா­வில் கலந்துகொண்ட திரு தமிழ்ச்­செல்­வன், 52, "பாரம்­பரிய பொங்­கல் கொண்­டாட்­டத்தை என் பிள்­ளை­க­ளுக்கு நேரில் காட்ட விரும்­பி­னேன். மாடு­கள், பொங்­கல் பொங்­கும் நேரத்­தில் எழும் ஆர­வா­ரம் முத­லி­ய­வற்றை அவர்­கள் கண்­முன்னே காண விழா வாய்ப்­பு அளித்­தது," என்­றார்.

குடும்பத்துடன் விழாவிற்கு வந்திருந்த திரு நா. சிவா, தன் மகன் முதல் முறையாக கோலமிடுதல் முதலியவற்றில் கலந்துகொண்டு புது அனுபவம் பெற்றதாகக் கூறினார். சிறார் படைத்த கோலாட்ட நடனத்தை குடும்பத்தார் ரசித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.