சபிதா ஜெயகுமார்
பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜனவரி 29ஆம் தேதி ஹவ்காங் ரயில் நிலையத்தின் அருகே உள்ள திறந்தவெளியில் பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
அல்ஜுனிட், ஹவ்காங் என இரண்டு இந்தியர் நற்பணிச் செயற்குழுக்கள் இணைந்து மூவாண்டுகளுக்குப்பின் ஏற்பாடு செய்த விழாவுக்கு சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கமும் 'ஹார்மனி சர்க்கிள்' அமைப்பும் ஆதரவளித்தன.
பல இனங்களையும் சேர்ந்த கிட்டத்தட்ட ஆயிரம் குடியிருப்பாளர்கள் இதில் கலந்துகொண்டு பாரம்பரிய முறையில் பொங்கல் வைத்தும் உறியடித்தும் கோலமிட்டும் கோலாகலமாக பொங்கலைக் கொண்டாடினர்.
பாரம்பரிய, நவீன நடனங்களும் பல்சுவை நிகழ்ச்சிகளும் நிகழ்வுக்கு சுவைகூட்டின. குறிப்பாக, நாட்டுப்புற இசைக்கலைஞர்கள் படைத்த கச்சேரி மக்களை ஈர்த்தது.
பொங்கல் பண்டிகை குறித்த புரிதலை ஆழமாக்கும் நோக்குடன் இவ்வாண்டின் விழா பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகக் கூறினார் ஹவ்காங் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவின் தலைவர் ராஜமோகன், 62.
நிகழ்வில் உரையாற்றிய அடித்தள அமைப்புகளின் ஆலோசகர் விக்டர் லாய், "பல்லினத்தவர் வாழும் சிங்கப்பூரில் பிற இனத்தவரின் வழக்கங்களைப் பாராட்டி ஒற்றுமையாக வாழ்வது அவசியம்," என்று கூறினார்.
விழாவில் கலந்துகொண்ட திரு தமிழ்ச்செல்வன், 52, "பாரம்பரிய பொங்கல் கொண்டாட்டத்தை என் பிள்ளைகளுக்கு நேரில் காட்ட விரும்பினேன். மாடுகள், பொங்கல் பொங்கும் நேரத்தில் எழும் ஆரவாரம் முதலியவற்றை அவர்கள் கண்முன்னே காண விழா வாய்ப்பு அளித்தது," என்றார்.
குடும்பத்துடன் விழாவிற்கு வந்திருந்த திரு நா. சிவா, தன் மகன் முதல் முறையாக கோலமிடுதல் முதலியவற்றில் கலந்துகொண்டு புது அனுபவம் பெற்றதாகக் கூறினார். சிறார் படைத்த கோலாட்ட நடனத்தை குடும்பத்தார் ரசித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

