ஐக்கிய நாட்டுக் கல்வி, அறிவியல், கலாசார நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ள பன்னாட்டுத் தாய்மொழி நாளை தமிழர் பேரவை தலைமையில் சிங்கப்பூர்த் தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து கொண்டாடவுள்ளன.
வரும் 26ஆம் தேதி ஞாயிறு மாலை 6 மணிக்கு உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தில் அந்நிகழ்ச்சி நடைபெறும்.
அதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழர் பேரவையின் மதியுரைஞருமான திரு. ஆர். ரவீந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார்.
உலகில் உள்ள பல்வேறு மொழிகளையும் பன்முகக் கலாசாரங்களையும் பாதுகாக்கும் நோக்கில் பன்னாட்டுத் தாய்மொழி நாள் 2000ஆம் ஆண்டிலிருந்து முதல் பிப்ரவரி 21 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது,
தமிழ் மொழியை சிங்கப்பூரில் தொடர்ந்து வாழும் மொழியாக வைத்திருக்கப் பாடுபட வேண்டும் என்ற நினைவூட்டலாக, பல்வேறு தமிழ் அமைப்புகள் இணைந்து இந்நிகழ்வை நடத்தவுள்ளன.
சிங்கப்பூரில் உலகத் தாய்மொழி நாள் கடந்த ஆண்டு முதன் முறையாக கொண்டாடப்பட்டது. சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஏற்பாடு செய்த அந்நிகழ்வில் 21 அமைப்புகள் பங்கேற்றன.
இவ்வாண்டு நிகழ்ச்சியில் தாய்மொழி பற்றிய கவிதை, குறுநாடகம், கலந்துரையாடல் உள்ளிட்டவை இடம்பெறும்.
செய்தி: தமிழர் பேரவை

