இந்திய முஸ்லிம் பேரவையின் 30வது ஆண்டிறுதிப் பொதுக்கூட்டமும் அதன் இணை அமைப்பினருடனான கலந்துரையாடலும் கடந்த 5ஆம் தேதி மினோரா சென்டரின் மூன்றாம் தளத்தில் நடைபெற்றது.
பேரவையின் ஆண்டிறுதிக் கூட்டத்துக்குப் பின்னர், இந்திய முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் சவால்கள் பற்றி இணை அமைப்புகளின் பேராளர்களிடமிருந்து திரட்டப்பட்ட கேள்விகளுக்குத் தீர்வுகாண அவர்களின் கருத்து அறியப்பட்டது.
'இந்திய முஸ்லிம் சமூகம் கல்வி, பொருளாதாரம், சமூக ரீதியாக பின்தங்கி உள்ளனரா?'
'இந்திய முஸ்லிம் குடும்பங்களில் அதிக விவாகரத்துகள் நடைபெறுகின்றனவா?' 'இளம் சமூகத் தலைவர்ளை எவ்வாறு இனங்காணுவது?' ஆகிய கேள்விகளைச் சுற்றி கலந்துரையாடல் அமைந்தது.
கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் இந்திய முஸ்லிம் பேரவையின் 17 இணை அமைப்புகளின் பேராளர்கள், இந்திய முஸ்லிம் பேரவையின் இளையர் அணியினர் என 60 பேர் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்தனர்.
கலந்துரையாடலை வழிநடத்திய இந்திய முஸ்லிம் பேரவையின் துணைத்தலைவர் ராஜா முஹம்மது, அதன்மூலம் சேகரிக்கப்பட்ட கருத்துகள் திரட்டப்பட்டு தீர்வுகள் பரிந்துரைக்கப்படும் என்று கூறினார்.
முன்னாள் ஆலோசகர்கள் நசீர் கனி, முஹம்மது ரபீக் ஆகியோரின் சேவைகளைப் பாராட்டி அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
இந்திய முஸ்லிம் பேரவையின் 30வது ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி சிறப்பு மலருக்கான கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.
செய்தி: இந்திய முஸ்லிம்
பேரவை

