ரச்சனா வேலாயுதம்
சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கத் தலைவராக நீண்டகாலம் பணியாற்றி வருபவரும் சிங்கப்பூரில் தமிழ்க் கல்வி சந்தித்த மாற்றங்களில் முக்கிய பங்காற்றியவர்களில் ஒருவருமான திரு சி சாமிக்கண்ணு தமது நினைவலைகளை நூலாக வெளியிட்டுள்ளார்.
'தமிழும் நானும்' எனும் தலைப்பிலான அந்த நூலின் அறிமுக விழா, உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தில் நேற்று மாலை நடந்தது.
சிறப்பு விருந்தினராக சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கத்தின் ஆலோசகரும் செம்பவாங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு விக்ரம் நாயர் கலந்துகொண்டார். திரு சாமிகண்ணுவின் முன்னாள் மாணவர்கள், சக ஆசிரியர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் என சுமார் 100 பேர் நிகழ்ச்சியில் பங்குபெற்றனர்.
இருபது பாகங்கள் கொண்ட இந்நூலை, மாணவர்கள் முதல் பெரியோர் வரை எளிதில் படித்துப் புரிந்துகொள்ளலாம் என்று தாம் நம்புவதாக திரு சாமிக்கண்ணு கூறினார். தமது சுயசரிதையை முடிக்க திரு சாமிக்கண்ணுவுக்கு நான்கு ஆண்டுகள் பிடித்தது.
கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் ஆசிரியர் பணியில் ஈடுபட்டுவரும் திரு சாமிக்கண்ணு, தமது சொந்த அனுபவங்களுடன், சிங்கப்பூரில் தமிழ்மொழிக் கல்வி, சிங்கப்பூர் தமிழ் ஆசிரியர் பணியின் வரலாறு, அவற்றில் காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகியவற்றை இந்நூலில் எடுத்துரைத்துள்ளார்.
அத்துடன், சிங்கப்பூரில் தமிழ்மொழி வலுப்பெற உழைத்தவர்களின் பெயர் களையும் அவர்களின் முயற்சிகளையும் நூலில் அவர் பதிவு செய்துள்ளார்.
"பல சிரமங்களை எதிர்கொண்ட பின்னர்தான் சிங்கப்பூரில் தமிழ்க் கல்வி நீடித்து நிலைப்பெற்றது. அந்தப் பயணத்தை இந்த நூலில் குறிப்பிட்டுள்ளேன்.
"தமிழின் அருமையை அடுத்த தலைமுறைக்கு நினைவுபடுத்தும் ஒரு பதிவாக இந்த நூல் இருக்கும் என்று நம்புகிறேன்," என திரு சாமிக்கண்ணு கூறினார்.
"அலட்சியமாக இருந்தால் அனைத்தையும் இழந்து விடுவோம்," என்று தமது உரையில் எச்சரித்த திரு சாமிக்கண்ணு, சிங்கப்பூரில் தமிழ் தொடர்ந்து வாழ அனைவரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
'நானும் தமிழும்' நூலை $20க்கு பெற்றுக்கொள்ள திரு சாமிக்கண்ணுவை sstu.advisor@gmail.com எனும் மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்ளலாம்.

