அன்பர் தினத்தில் பெருகும் சமூக உணர்வு

அன்பர் தினத்தில் பெருகும் சமூக உணர்வு

2 mins read
6c8787c9-fc75-4911-b3b9-6b3a464de407
-

அன்­பர் தினத்தை முன்­னிட்டு சமூ­கத்­தில் அன்பை பரப்­ப­வும் குழந்­தை­கள் மத்­தி­யில் சமூக உணர்வை வளர்க்­க­வும் 19வது முறை­யாக 'புரோ­ஜெக்ட் ரிஃப்ரெஷ்' செங்­காங் வட்­டா­ரத்­தில் கடந்த சனிக்­கி­ழமை நடந்­தது.

இந்­நி­கழ்­வில் 26 வாடகை வீடு­களை சுத்­தம் செய்து, அடைந்து கிடைக்­கும் பொருள்­களை அகற்றி, சுவ­ருக்கு வெள்ளை சாயம் பூசி­யும் 200 தொண்­டூ­ழி­யர்­கள் சேவை புரிந்­த­னர்.

வர்த்­த­கப் பங்­கா­ளித்­துவ அமைப்­பு­கள், தொழில்­நுட்ப கல்­விக் கழக (காலேஜ் ஈஸ்ட்) மாண­வர்­கள் ஆகி­யோ­ரு­டன் வெகு­கா­ல­மாக வட­கி­ழக்கு சமூக மேம்­பாட்டு மன்­றத்­து­டன் தொண்­டூ­ழி­யம் புரி­வோ­ரும் இந்­நி­கழ்­வில் கலந்­து­கொண்­ட­னர்.

யங்-என்­டி­யுசி, வட­கி­ழக்கு சமூக மேம்­பாட்டு மன்­றம் இணைந்து தொடங்­கிய 'புரோ­ஜெக்ட் ரிஃப்ரெஷ்' விழாக்­கா­லங்­களில் நடை­பெ­றும் ஒன்­றா­கும். கடந்த நான்கு ஆண்­டு­க­ளாக ஒவ்­வொரு காலாண்­டி­லும் இந்த தொண்­டூ­ழிய நட­வ­டிக்கை நடை­பெற்று வரு­கிறது.

தொண்­டூ­ழி­யத்­தின் ஓர் அங்­க­மாக 'பிரைட் கிட்ஸ் ஸ்கூல் ஹவுஸ்' பாலர் பள்­ளி­யின் 15 மாணவ மாண­வி­கள் பங்­கேற்று 150 வீடு­க­ளுக்கு அன்­ப­ளிப்­பு­களும் மலர்­களும் வழங்­கி­னர். 'போஸ்­டட்' நிறு­வ­னம் அன்­ப­ளிப்­பு­களை நன்­கொ­டை­யாக வழங்­கி­யது.

புற்­று­நோ­யா­லும் நீரி­ழி­வா­லும் பாதிக்­கப்­பட்­டுள்ள திரு­வாட்டி வசந்தி வீரா­சாமி, 62, 'புரோ­ஜெக்ட் ரிஃப்ரெஷ்' திட்­டத்­தின்­மூ­லம் இரு­முறை பய­ன­டைந்­துள்­ளார்.

அவ­ருக்கு வரு­மா­னம் இல்லை. எனவே, தற்­கா­லிக பணி­களை செய்­து­வ­ரும் 20 வயது மகனை சார்ந்து அவர் இருக்­கி­றார். உடல்­நிலை குன்­றிய நிலை­யில் வீட்டு வேலை­களைப் பார்க்க மிக­வும் சிர­மப்­படு­வ­தாக அவர் கூறி­னார்.

இந்­நி­லை­யில் தொண்­டூ­ழியர்­க­ளின் சேவை திரு­வாட்டி வச­ந்திக்கு பேரு­த­வி­யாக இருந்­தது. தன்­னு­டன் பணி­வன்­பு­டன் பழகி வீட்டை சுத்­தம் செய்து கொடுத்த தொண்­டூ­ழி­யர்­களுக்கு தாம் நன்­றிக்­க­டன் பட்­டி­ருப்­ப­தாக திரு­வாட்டி வசந்தி சொன்­னார். சிறு­வர்­கள் எதிர்­பா­ராத வித­மாக அன்­ப­ளிப்பு கொடுத்­த­தும் அவ­ருக்கு மகிழ்ச்சி அளித்­தது.

இத்­திட்­டத்­தில் முதல்­மு­றை­யாக தொண்­டூ­ழி­யம் புரிந்த 'ஐவாவ்' நிறு­வ­னத்­தைச் சேர்ந்த திரு அஷோ­கன் ராம­கி­ருஷ்­ணன், 49, சக ஊழி­ய­ரு­டன் நிகழ்­வில் கலந்­து­கொண்­டார்.

தனி­யாக வாழும் மூத்­தோ­ருக்கு உத­வக்­கூ­டிய அவ­சர உதவி பொத்­தான்­களை வடி­வ­மைக்­கும் தனது நிறு­வ­னம், சமூ­கத்­திற்கு உத­வும் நோக்­கில் தொண்­டூ­ழி­யத்­தில் ஈடு­பட தொடங்­கி­யுள்­ளது என்­றும் இது தான் சமூ­கத்­திற்கு சேவை புரிய நல்ல வாய்ப்­பாக அமைந்­தது என்­றும் அவர் கூறி­னார்.

அன்­பர் தினத்­தை­யொட்டி நடந்த இந்த நிகழ்வு தனி­யாக வசிக்­கும் மூத்­தோர், அல்­லது வாழ்க்­கைத் துணையை இழந்­த­வர்­க­ளைக் கொண்­டாட்­டங்­களில் இணைக்க வழி­வ­குக்­கிறது என்று வட­கி­ழக்கு சமூக மேம்­பாட்டு மன்ற மேயர் டெஸ்­மண்ட் சூ தெரி­வித்­தார்.

அதோடு, சிறு வய­தி­ல் இருந்தே மாண­வர்­க­ளைத் தொண்­டூ­ழி­யத்­தில் ஈடு­ப­டுத்­து­வ­தன் மூலம் சமூக உணர்­வை­யும் சமூ­கப் பிணைப்­பை­யும் வலுப்­படுத்­த­லாம் என்­றும் அவர் கூறி­னார்.

செய்தி: பொன்மணி உதயகுமார்