பண்பாடுகள் பற்றி இளையர்களுக்கான நிகழ்வு

பண்பாடுகள் பற்றி இளையர்களுக்கான நிகழ்வு

1 mins read

மோனலிசா

இளையர்கள் மத்தியில் தமிழ்மொழி ஆர்வத்தைத் தூண்டும் நோக்கில் "பண்பாடுகள்: ஆழமும் அகலமும்" எனும் இளையர்களுக்கான நிகழ்வை சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம் ஏற்பாடு செய்துள்ளது.

பிப்ரவரி 26ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 12.30 வரை தேசிய நூலகக் கட்டடத்தின் பாசிபிலிட்டி அறையில் நடைபெறவிருக்கும் இந்நிகழ்வு சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் நான்காம் ஆண்டு நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் 'நானும் தமிழும்' எனும் தலைப்பிலான 10 காணொளிகளைக் கொண்ட காணொளித் தொகுப்பு வெளியிடப்படவுள்ளது.

இந்தத் தொகுப்பில், தமிழ் அல்லாத பிற துறைகளில் சிறந்து விளங்கும் 10 வல்லுநர்கள், தமிழ்மொழி எவ்வாறு தங்கள் வாழ்விலும் பணியிலும் முக்கியப் பங்காற்றியுள்ளது என்பதைப் பகிர்ந்துள்ளனர்.

மேலும், இந்நிகழ்வில் தமிழ்ப் பண்பாடு மற்றும் பல்லின மக்களின் பண்பாடுகளை நாம் புரிந்துகொள்ள வேண்டியதன் அவசியம் குறித்த கலந்துரையாடல் அங்கமும் இடம்பெறும்.

இவ்வங்கத்தில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் சித்ரா சங்கரன், ஆய்வாளரான செல்வி நளினா கோபால், சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் தலைமை நிர்வாகி அருண் மகிழ்நன் ஆகியோர் பங்குகொள்வர்.

"பண்பாடு குறித்த ஆழமான புரிந்துணர்வை இளையர்கள் கொண்டிருக்கவேண்டும் என்ற நோக்கிலேயே இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளோம்," என்று கூறினார் இந்நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த செம்பியன் சோமசுந்தரம், 30.

இந்நிகழ்வில் பங்குகொள்ள பின்வரும் இணைய முகவரியில் பதிவுசெய்யலாம் tinyurl.com/4thcstc23.