அனுஷா செல்வமணி
சமூக உதவியில் ஈடுபாடு கொண்டுள்ள உடலுறுதிப் பயிற்றுவிப்பாளரான 32 வயது விக்னேஷ் வீனு, சிறுவர்களுக்கு உதவ அண்மையில் மாறுபட்ட ஓர் உடற்பயற்சி இயக்கத்தை நடத்தினார்.
'மேக் எ விஷ் ஃபௌண்டேஷன்' எனும் ஒரு லாப நோக்கமற்ற அமைப்பிற்கு நிதி திரட்ட 'டெட்லிஃப்ட்' எனும் எடைதூக்கும் நிகழ்ச்சியை இவர் ஒருங்கிணைத்தார்.
கடந்த 43 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் இந்த அமைப்பு, நாட்பட்ட நோய்களால் பாதித்த சிறுவர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது.
நிகழ்ச்சியில் 100 கிலோகிராம் எடைக்கு $10 திரட்டப்பட்டது. நிகழ்வில் பங்கேற்றவர்கள் மொத்தம் 100,000 கிலோகிராம் எடை தூக்கினர். நிகழ்ச்சியில் மொத்தம் $10,000 நிதி திரட்டப்பட்டது. இதில் ஒரு பகுதி அண்மையில் செய்தியில் வெளிவந்த குழந்தை ஷமேலின் சுகாதார செலவுகளுக்கு ஒதுக்கப்பட்டது.
"உடற்பயிற்சியினால் உடல்நலம் மேம்படுவதோடு, தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். உடல்நலனுக்கான பயிற்சிகள் மூலம் மற்றவர்களுக்கும் உதவ முடிவது மகிழ்ச்சி அளிக்கிறது," என்றார் விக்னேஷ்.
ஒரு கட்டத்தில் 140 கிலோகிராம் எடை கொண்டிருந்த திரு விக்னேஷ், ஒரே ஆண்டில் 70 கிலோ எடையை குறைத்தார். மது அருந்துவதுடன், விரைவுணவு, கொழுப்பு சத்து அதிகம் கொண்டுள்ள உணவுகளையும் உண்டு வந்த விக்னேஷ், இப்பொழுது முற்றிலும் மாறிவிட்டார்.
இருபது வயதுகளில் பருமனாக இருந்த தருணங்களை நினைவுகூர்ந்த அவர், அதனால் பிடித்தமான உடைகளை அணிய முடியாமல்போனது, நடந்தால் மூச்சுத்திணறல், வகுப்புகளுக்கு செல்ல முடியாத அளவிற்கு உடற்சோர்வு போன்றவை ஏற்பட்டதாகக் கூறினார். 25 வயதில் இதயத்தில் வலி ஏற்பட்டபோது, மருத்துவர் அவர் கிட்டத்தட்ட மாரடைப்பால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்று கூறியதுடன், உடல் நலத்தை மேம்படுத்தாவிட்டால் அவர் 30 வயதுக்குள் இறந்து விடுவார் என்றார். அது விக்னேஷின் வாழ்க்கைப் போக்கை மாற்றியது.
தற்போது 79 கிலோ எடையுடன் கட்டுடலோடு விக்னேஷ், அதிகாலையில் நான்கு மணிக்கு எழுந்து உடற்பயிற்சி செய்வதில் இன்புறுகிறார்.
நீரிழிவு நோயுள்ள தந்தை, இருதய அறுவை சிகிச்சை செய்துள்ளார். அதனால், குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் உடல் நலத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார்.
உடல் எடை கோளாறுகளால் சிரமப்படுவோருக்கு உதவிக்கரம் நீட்டும் முனைப்பில் விக்னேஷ், 2017ஆம் ஆண்டு 'ஸ்கல்ப்ட் சொசைட்டி' எனும் உடற்பயிற்சி கூடத்தை திறந்தார். உடல் பருமனை குறைப்பதற்கும் தசைகளை வலுப்படுத்துவதற்கும் வழிகாட்டி வரும் விக்னேஷ் தற்போது 100 பேருக்கு மேல் பயிற்சி அளித்து வருகிறார்.
sanush@sph.com.sg

