ரச்சனா வேலாயுதம்
'சேட்ஜிபிடி' (ChatGPT) என்ற செயற்கை அறிவுத்திறன் மென்பொருள் மூலம் பள்ளிகளில் பாடம் கற்பிக்க, கல்வி அமைச்சு ஆசிரியர்களைத் தயார் செய்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு காலப்போக்கில் பரவலாகப் பயன்படுத்தப்படும் நிலையில், மாணவர்களுக்கு அதைச் சரியான முறையில் கையாளச் சொல்லிக் கொடுப்பது நம் பொறுப்பு என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தமது நாடாளுமன்ற உரையில் கூறினார்.
மாணவர்களுக்கு அடிப்படை அறிவும் சிந்தனைத் திறனும் இருக்கும் நிலையில் அறிவியல் நுண்ணறிவை அவர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
சான் பிரான்சிஸ்கோ ஆராய்ச்சி நிறுவனமான 'ஓபன் ஏஐ', இந்த 'சேட்ஜிபிடி'யை உருவாக்கியதை அடுத்து அதைக் கடந்த நவம்பரில் பொதுமக்களின் இலவசப் பயன்பாட்டுக்கு வெளியிட்டும் இருந்தது.
கணக்குக் கேள்விகளுக்குப் பதில் கண்டறிதல், இசையமைத்தல், கணினிக் குறியீட்டு மொழியைச் செம்மைப்படுத்துதல், கட்டுரை எழுதுதல் போன்ற செயல்பாடுகளைத் திறமையாகக் கையாளும் திறன் பெற்றது இத்தொழில்நுட்பம்.
இதற்கிடையே மாணவரின் கற்பனையைத் தூண்டும் வகையில் தேர்வுகளில் சிந்திக்க வைக்கும் கதை வடிவ வினாக்கள் கேட்கப்படும்போது இந்தத் தொழில்நுட்பத்தின் தேவை குறைகிறது என்று சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் சட்டத் துறையைச் சேர்ந்த மூத்த விரிவுரையாளர் அல்லி உத்திராபதி கூறினார்.
"இந்தச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி வீட்டுப்பாடங்களையும் தேர்வுகளையும் எழுதுவது, எழுத்துத் திருட்டு என்பதை மாணவர்களும் அறிவர்," என்றார் அவர்.
இதுவரை சேட்ஜிபிடி தொடர்பான மோசடிகள் சிங்கப்பூரில் கண்டுபிடிக்கப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டது. எனினும் மோசடிகளைத் தவிர்க்க நாம் தயாராக இருக்க வேண்டும் என்று சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் மணிவண்ணன் முருகேசன் கூறினார்.
"சேட்ஜிபிடிக்குப் புரியாதவண்ணம் சுய கருத்துகளை ஆராயும் கேள்விகளைப் பல்கலைக்கழகம் தயாரிக்க முயற்சி செய்கிறது. தற்போது இந்தத் தொழில்நுட்பம் தமிழ் கேள்விகளுக்குச் சரியாகப் பதிலளிக்கும் திறன் இல்லாததால் தமிழ் பாடங்களுக்கு இதைப் பயன்படுத்த முடியாது.
எனினும், வளர்ந்துவரும் இந்தத் தொழில்நுட்பத்தைத் தட்டிக்கழிக்காமல் அதன் விளைவுகளை மாணவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும்," என்றார் தமிழ்மொழி மற்றும் இலக்கியம், மனிதவியல் மற்றும் நடத்தை அறிவியல் பள்ளித் தலைவரான இவர்.
கடினமான கேள்விகளை எளிதான முறையில் சொல்லிக் கொடுக்கும் இந்த தொழில்நுட்பம், கருத்துத் திருட்டைக் கண்டறியும் 'டர்னிட்டின்' (Turnitin) போன்ற சேவையால் கண்டறிய முடியுமா என்ற அச்சம் உள்ளது என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக இணைப்பேராசிரியர் சித்ரா சங்கரன் குறிப்பிட்டார்.
"கூகல், விக்கிபீடியா போல சேட்ஜிபிடியை நாம் அறிவுத்திறனை வளர்க்கப் பயன்படுத்தலாம். ஆனால், அது அளிக்கும் விடைகளைக் கண்மூடித்தனமாக நம்பாமல் சரிபார்க்க வேண்டும். மனிதர்களைப் போல விடை அளிக்கும் இந்தத் தொழில்நுட்பம் ஆசிரியர்களை அச்சுறுத்தினாலும் பள்ளியில் அதன் பயன்பாட்டைத் தடுக்க பல்முனை அணுகுமுறையை நாம் மேற்கொள்ள முயற்சி செய்கிறோம்," என்று குறிப்பிட்டார்.
தமது பல்கலைக்கழகப் பாடங்களுக்கு சேட்ஜிபிடியைப் பயன்படுத்தும் 24 வயது ஷாம் சி, இந்தச் செயற்கை நுண்ணறிவு தன் கல்விப் பயணத்தை சுலபமாக்கி உள்ளதாகக் கூறினார்.
"எனக்குப் புரியாத கேள்விகளை இந்த சேட்ஜிபிடி மூலம் உடனுக்குடன் கேட்டு தெரிந்துகொள்கிறேன். ஒரு வாரம் கழித்து வகுப்பில் ஆசிரியர்களின் பதிலுக்காக இனி நான் காத்திருக்கத் தேவையில்லை," என்று சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் பட்டப் படிப்பை மேற்கொள்ளும் ஷாம் கூறினார்.
இந்தச் செயற்கை நுண்ணறிவு நமக்கு உதவும் என்றாலும் இது நம்மை அடிமையாக்கிவிடலாம் என்ற பயம் தனக்குள்ளதாக 23 வயது பிரதிஷா அ. குறிப்பிட்டார்.
"இதை எளிமையாகப் பயன்படுத்த முடிகிறது என்றாலும் சேட்ஜிபிடி அளிக்கும் பதில்கள் சரியா தவறா என்று ஆராயாமல் அப்படியே நம்பிவிட முடியாது. வீட்டுப்பாடங்களைச் சுயமாகச் செய்வதால் என் அறிவுத்திறன் வளர்கிறது. ஆனால் கணினியில் வரும் பதில்களைப் புரிந்துகொள்ளாமல் எழுதுவது எந்திர வாழ்க்கைக்குச் சமமாகும்," என்று கூறினார் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு படிக்கும் இவர்.
செயற்கை நுண்ணறிவை நம் வேலையிலும் நம் வாழ்க்கையிலும் ஒன்றிணைப்பதால் மாற்றங்கள் பெரிதளவில் ஏற்படவே செய்யும். இந்நிலையில் இந்த 'சேட்ஜிபிடி' அந்தப் பெரும் மாற்றங்களுக்கு ஒரு முதல் படி என்று சொல்வதே தகும்.