பிள்ளைகளுடன் வெளிநாட்டுப் பயணம் செல்லும்போது எதிர்பாராத சூழல்கள் ஏற்படலாம், நெருக்கடிகள் பலமடங்காகலாம். 12 மணிநேர விமானப் பயணம் முடியும்வரை பிள்ளை கதறி அழுவது முதல் வெளிநாட்டில் பிள்ளை உடல்நலமில்லாமல் போவதுவரை நமது விடுமுறைப் பயணத்தை மறக்க முடியாத ஓர் அசம்பாவிதமாக மாற்றும் வகையில் எந்நேரமும் சந்தர்ப்பங்கள் எழுவதுண்டு.
இருப்பினும், இதையெல்லாம் கருத்தில் கொண்டு முன்தயாரிப்போடு இருந்தால் சிறு பிள்ளைகளுடன் பயணம் செய்வது சுமுகமாகவும் குதூகலமாகவும் அமையலாம்.
விமானத்தில் உங்களின் பிள்ளை கத்தினால்...
நீண்டதூர விமானப் பயணத்தின்போது காது வலி, அல்லது காது அடைப்பு காரணமாக உங்களின் பிள்ளை கத்தி அழுதுகொண்டிருக்கும் நிலை ஏற்படலாம். அந்நேரத்தில் தூக்கம் கலைந்த நிலையில் சுற்றி உள்ளோர் உங்களை முறைத்துப் பார்க்கலாம்.
இவ்வாறு விமானத்தில் உங்களின் பிள்ளை அடாவடித்தனம் செய்வதைத் தடுப்பதற்கு வாயில் அசைபோடுவதற்கு இனிப்பு ஏதேனும் வைத்துக்கொள்ளுங்கள். கைக்குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கலாம். பிள்ளைகள் விழுங்குவதை இது ஊக்குவிப்பதால் அவர்களின் காது வலியும் தணியும், மற்றப் பயணிகளின் கோபமும் தணியும்.
பிள்ளைகளுக்குப் பிடித்தமான நொறுக்குத்தீனி, வண்ணம் தீட்டும் புத்தகம், விளையாட்டுப் பொருள் போன்றவற்றைத் தருவதும் உதவும்.
பிள்ளைகள் உடல்நலம்
இல்லாமல் போனால்...
அடிப்படை மருத்துவப் பொருள்கள் அடங்கிய முதலுதவிப் பெட்டி, சிறாருக்கு உகந்த மருந்துகள் போன்றவற்றைப் பயணத்தின்போது கொண்டுசெல்லலாம். தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு அருகில் மருத்துவமனை அல்லது மருந்தகம் இருக்குமாறு பார்த்துவிட்டு ஹோட்டலை முடிவு செய்யலாம். கடுமையான உடல்நலப் பாதிப்புகளால் செலவுகள் நேரக்கூடும். அதனால் பயணக் காப்புறுதித் திட்டம் ஒன்றுக்குப் பதிவுசெய்வதிலும் தவறில்லை.
ஹோட்டல் அறை
அசுத்தமாக இருந்தால்...
சிறு பிள்ளைகள் எளிதில் உடல்நலப் பாதிப்புக்கு உள்ளாகலாம் என்பதால் ஹோட்டல் பற்றி இணையத்தில் பதிவான விமர்சனங்களை முதலில் வாசித்துவிடுங்கள். குடிநீர் வசதியையும் சோதித்துப் பாருங்கள். அறையில் கிருமிநாசினியைத் தெளிப்பதும் உதவும்.
பிள்ளைகளுக்கு ஏற்ற
இடங்கள் இல்லாவிட்டால்...
இதற்கும் திட்டமிடுதலே சிறந்தது. போகவுள்ள நாட்டில் பிள்ளைகளுக்கு ஏற்ற இடங்களை முன்னதாகவே ஆராய்ந்து, முடிந்தால் நுழைவுச்சீட்டுகளையும் முன்கூட்டியே வாங்கிவிடுங்கள். வேறு வழியில்லாவிட்டால், அவர்களுக்குப் பிடித்தமான ஐஸ்கிரீம் அல்லது சாக்லெட்டை வாங்கித் தந்துவிடுங்கள். அதுவே அவர்களைச் சாந்தப்படுத்திவிடும்.
என்னதான் நாம் சரியாகத் திட்டமிட்டாலும் வாகனங்கள் பழுதாவதும் விமானங்கள் நாமில்லாமல் புறப்படுவதும் நடக்கக்கூடும். அதனால் முக்கியமாக, மாற்றங்களை ஏற்கும் தன்மை பெற்றோருக்கு இருக்க வேண்டும். அதைக் கண்டு பிள்ளைகளும் சாந்தமடைவர் என நம்புவோம்.

