வேலை பார்க்கும் இடத்தில் இதற்குமுன் நீங்கள் அழுதிருந்தால், அதைப் பற்றி பின்னர் யோசித்துப் பார்க்கும்போது உங்களுக்குச் சற்று சங்கடமாக இருக்கலாம். உங்களைப் பற்றி வேலை நண்பர்கள் என்ன நினைப்பார்கள், உங்களின் திறமையைப் பற்றி அதுவரை அவர்கள் நினைத்திருந்தது பாதிக்கப்படுமா என்றெல்லாம் நீங்கள் கவலைப்படலாம்.
இத்தகைய சூழலில் அடுத்து எவ்வாறு வலிமையுடன் மீண்டுவரலாம் என்பதே முக்கியம்.
1. அழுவது உங்கள் வேலைக்கு
உலை வைக்காது
வேலையிடத்தில் அழுவதால் உங்களின் வாழ்க்கைத்தொழில் எவ்வகையிலும் பாதிப்படையாது.
நாம் நினைப்பதைவிட நம்மைச் சுற்றியுள்ளவர்கள் கூடுதல் அனுதாபம் மிக்கவர்கள் என்பதே உண்மை.
மூத்த நிர்வாகிகள் 2,000 பேரிடையே நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், அவ்வப்போது அழுவதில் தவறேதும் இல்லை என்று 44 விழுக்காட்டினர் கூறியிருந்தனர்.
வேலையிடத்தில் நம்மைப் பற்றி மற்றவர்கள் கொண்டுள்ள எண்ணம் அழுவதால் மாறாது என்று 30 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
அதனால் முதலில் நம்மீது நாமே பரிவு காட்ட வேண்டும். நம்மை நாமே கடுமையாக விமர்சித்துக்கொண்டு மற்றவர்கள் கூறும் குறைகளைப் பெரிதுபடுத்தித் துவண்டு போகாமல் பார்த்துக்கொள்ளலாம். உணர்வுகளை வெளிப்படுத்துவதில் தவறில்லை.
2. சிறிது நேரம் அலுவலகத்தை
விட்டு வெளியேறுங்கள்
ஒருவருடனான உரையாடல் உங்களின் மனதைப் பாதிப்பதுபோல் இருந்தால் சிறிது நேரம் அவ்விடத்தை விட்டு வெளியேறிவிடுங்கள்.
சிறிது மூச்சுப் பயிற்சி செய்தால் மனம் அமைதி பெறும், உணர்வுகளும் கட்டுக்குள் இருக்கும்.
3. அழுததற்கு மன்னிப்பு
கேட்கத் தேவையில்லை
அலுவலகத்தில் அழுகை வந்துவிட்ட பிறகு உங்கள் எதிரே உள்ளவரிடம் 'அழுவதற்கு மன்னித்துக்கொள்ளுங்கள்' என்று கூறவேண்டாம். அது உங்களின் உணர்வுகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளாததற்குச் சமமாகும்.
மேலதிகாரி சொன்ன சொல்லோ மனவுளைச்சலோ, வேலையில் சிறந்து விளங்க வேண்டும் என்ற காரணத்தினால் கண்ணீர் விட்டீர்கள் என்பதை நீங்களும் மற்றவர்களும் உணர்வதே முக்கியம்.
4. உதவி நாடத் தயங்காதீர்
திடீரென்று ஒருநாள் வேலையிடத்தில் அழுகை வந்தால் அதை வழக்கத்திற்கு மாறானது எனக் கருத முடியாது. இருப்பினும் அடிக்கடி அலுவலகத்தில் அழுதுகொண்டிருக்கும் பழக்கம் உங்களுக்கு ஏற்பட்டால் மனநல மருத்துவரை நாடுவதில் தவறில்லை.
மனிதனுக்கு உணர்வுகள் இருப்பது இயல்புதான். அந்த உணர்வுகளைச் சரிவர கையாளக் கற்றுக்கொண்டால் நமது வலிமையையும் தன்னம்பிக்கையையும் பிறர் அறிந்திடுவர்.
வேலையிடத்தில் குறிப்பிட்ட சிலரால் உங்களுக்கு அடிக்கடி மனவுளைச்சலும் அழுத்தமும் ஏற்பட்டால் அந்நபர்கள் குறித்து உங்களின் மேலதிகாரியிடம் தெரிவிப்பது நல்லது.
நமது வளர்ச்சியையும் மனநலத்தையும் பாதிக்கும் வண்ணம் வேலையிடம் அமைந்தால், அத்தகைய வேலைச் சூழல் தேவையா என்பது குறித்தும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
செய்தி: இணையம்

