தமிழ்மொழிவிழா 2023ஐ முன்னிட்டு வளர்தமிழ் இயக்கம், தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக்குழு மற்றும் தேசிய நூலக வாரியத்தின் ஆதரவில் கவிமாலை அமைப்பு இவ்வாண்டும் கவிதைப் போட்டிகளை நடத்தும்.
மாணவர்களின் தமிழாற்றலை வளர்க்கும் நோக்கில் உயர்நிலையில் பயிலும் மாணவர்களுக்கான கவிதை, மற்றும் மொழிபெயர்ப்புப் பயிலரங்கு நடத்தப்படும். தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான கவிதை சொல்லும் போட்டி மற்றும் பொதுமக்களுக்கான கவிதைப் போட்டியும் நடைபெறும்.
கவிதைப் பயிலரங்கும் போட்டியும்
கவிதைப் பயிலரங்கு மற்றும் போட்டிகளில் உயர் நிலைப் பள்ளி, தொடக்கக்கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள், தொழில் நுட்பக் கல்விக்கழகங்களில் பயிலும் மாணவர்கள் கலந்துகொள்ளலாம்.
கவிதைப் பயிலரங்கினை இசைக்கவி இரமணன் வழி நடத்துவார். கவிதைப்போட்டிக்கு அழகு என்ற கருப்பொருளில் அரங்கிலேயே கவிதை எழுதவேண்டும். முன்பதிவு செய்ய இறுதிநாள் நாளை 22ஆம் தேதியாகும்.
மொழிபெயர்ப்புப் பயிலரங்கு
மொழிபெயர்ப்பு பயிலரங்கினைத் தொடர்ந்து நடைபெறும் போட்டியில் தமிழ்க் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தல் வேண்டும்.
இவ்விரு போட்டிகளும் பிப்ரவரி 25ஆம் தேதி காலை 9 மணிக்கு ஜாலான் புசார் சமூகமன்றக் கலையரங்கத்தில் நடைபெறும். முன்பதிவிற்கு http://tinyurl.com/ycefs597
தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு
தொடக்கநிலை 1 முதல் 3 வரை பயிலும் மாணவர்கள் சிங்கப்பூர் கவிஞர்களின் கவிதைகளைத் தேர்வு செய்து சொல்லவேண்டும்.
தொடக்க நிலை 4 முதல் 6 வரை பயிலும் மாணவர்கள் காப்பியங்களில் இருந்து அழகு என்ற கருப்பொருளைக் கொண்டவற்றைப் பாடலாகவோ, நடனமாகவோ அல்லது நடிப்பாகவோ படைக்கலாம்.
இருபோட்டிகளிலும் ஒவ்வொரு மாணவருக்கும் அதிகபட்ச நேரமாக மூன்று நிமிடங்கள் வழங்கப்படும். முன்பதிவிற்கு http://tinyurl.com/2p85jnk8
போட்டிகள், வரும் மார்ச் 18ஆம் தேதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு விக்டோரியா சாலையில் உள்ள தேசிய நூலகத்தின் ஐந்தாவது தளத்தில் நடைபெறும்.
பொதுப்பிரிவுப் போட்டி
சிங்கப்பூரர், நிரந்தரவாசி, முறையான வேலை அனுமதி பெற்று சிங்கப்பூரில் வசிக்கும் எவரும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம்.
24 வரிகளுக்குள் அழகு என்ற கருப்பொருளில் கவிதை எழுத வேண்டும். ஒவ்வொருவரும் இரண்டு கவிதைகள் அனுப்ப வேண்டும்.
கலந்துகொள்ள விரும்புவோர் www.kavimaalai.com என்ற இணையத் தளம் வழியாகவோ அல்லது poems@kavimaalai.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ கவிதைகளை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய இறுதித்தேதி மார்ச் 5ஆம் தேதியாகும்.
போட்டிகள் தொடர்பான மேல்விவரங்களுக்கு 9144 5461/ 8332 7357
தமிழ்மொழி மாதத்தின் நிறைவு நிகழ்ச்சியாக நடக்கவுள்ள கவிமாலை நிகழ்வில் வெற்றிபெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.
- செய்தி: கவிமாலை அமைப்பு

