"இப்போது பொறுத்துக்கொள்கிறேன். ஆனால் நான் பெரியவனானதும் பாருங்கள், என்ன செய்கிறேன் என்று!" சீனாவைச் சேர்ந்த ஆறு வயது சிறுவன், தன் அம்மாவை இவ்வாறு திட்டியிருந்த காணொளி ஒன்று, பரவலாகப் பகிரப்பட்டும் பேசப்பட்டும் வருகிறது. எப்போதும் அளவுக்கு அதிகமாகத் தன்னைக் கண்டிப்பதாகக் கூறித் தன் தாயாருக்கு எச்சரிக்கை விடுத்திருந்தான் சிறுவன்.
எந்நேரமும் தன்னைத் திட்டிக்கொண்டும் தன்னை நோக்கிக் கத்திக்கொண்டும் இருக்கும் அம்மாவிடம் அவர், "சின்ன விஷயத்துக்கெல்லாம் என் மனதைப் புண்படுத்துகிறீர்கள். உங்கள் போக்கே எனக்குப் புரியவில்லை," என்றார். தன்னுடைய தாயாரின் கோபத்துக்கு எப்போதுமே தான் ஆளாவது பெரும் துன்பத்தைத் தருவதாகக் கூறிய அவர், அந்தத் தாயாரை 'பயமுறுத்தும் புலி' என்றும் வருணித்தார்.
அத்துடன் நின்றுவிடாமல் தன் அம்மாவின் பிள்ளை வளர்ப்பு முறை சரியில்லை என்றும் ஒருநாள் இதற்கான பின்விளைவுகளை அவர் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் கூறினார்.
உறங்குவதற்கு நேரமாகிவிட்டதால் தன் இரவு உணவைச் சீக்கிரமாக முடிக்கும்படி அந்த அம்மா கூறியதற்கு, மகன் இவ்வாறு பேசத் தொடங்கியதாக 'ஸ்டார் வீடியோ' நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் சிறுவனின் தாயார் கூறினார்.
இவ்வாறு மகனின் பேச்சைக் கேட்ட அந்தத் தாயார், தாம் இந்த விமர்சனத்தை மதிப்பதாகவும் ஏற்றுக்கொள்வதாகவும் பதிலளித்தாராம். காணொளியைச் சிறுவனின் தாயார் இணையத்தில் பதிவேற்றம் செய்ததை அடுத்து, இணையவாசிகள் பலர் தங்களின் பிள்ளை வளர்ப்பு முறையையும் ஆராயத் தொடங்கிவிட்டனர். சிறுவன் கூறியதில் தவறில்லை என்றும் கோபப்படுவதை முடிந்தவரை பெற்றோர்கள் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் பலர் பதிவிட்டனர். சிறுவனின் குமுறலைப் பார்வையிட்ட சிலர், தங்களுக்கு இது ஒரு பாடமாக அமைந்ததாகக் கூறினர்.
நம் பிள்ளைகள் சிறுவயது என்றாலும் அவர்களுக்கும் உணர்ச்சிகள் இருக்கும் என்பதை மறந்துவிட்டு நமது எதிர்பார்ப்புகளை ஓயாமல் அவர்கள்மீது திணிக்கிறோம். அத்தகைய நெருக்குதலுக்கு ஆளாகும் பிள்ளைகள், மன அழுத்தத்தைச் சிறு வயதிலேயே உணரத் தொடங்கிவிடுவர் என்பதே உண்மை.
பிள்ளை வளர்ப்பில் கண்டிப்பாக இருந்தால் பிள்ளைகள் வாழ்க்கையில் ஓர் உயர்ந்த நிலையை அடைவர் என்று பெற்றோர் சிலர் நினைக்கிறார்கள். போட்டித்தன்மையுடன் பிள்ளை வளர்ப்பில் ஈடுபடும் போக்கு ஆசிய பெற்றோரிடையே பரவலாகவே காணப்படுகிறது.
கொஞ்சம் கண்டிப்பு, கொஞ்சம் அதிகாரம், கொஞ்சம் அன்பு என வெவ்வேறு பிள்ளை வளர்ப்பு முறைகளைப் பெற்றோர் கையாளும்போது பிள்ளைகள் ஆரோக்கியமான மனநிலையைப் பெறுவர். அதனால் ஆதரவும் ஆறுதலும் அவசியம் என்பதைப் பெற்றோர் முதலில் உணர வேண்டும்.

