உடல் குறைபாடு அல்லது அறிவுசார் குறைபாடு இருந்தாலும் ஒருவரால் திருப்தியான வாழ்க்கையை வாழ முடியும். அதற்கு விளையாட்டு நடவடிக்கைகளும் உடற்பயிற்சியும் கைகொடுக்கும் எனக் கூறப்படுகிறது.
உடலுக்குப் பயிற்சி தரும்போது ஒருவரது உடல் வலிமை கூடுவதுடன் வாழ்க்கைமுறை சார்ந்த நோய்கள் ஏற்படும் அபாயத்தையும் அது குறைக்கிறது. அத்துடன் அவரால் மேலும் நன்கு உறங்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள். குறைபாடுகளுடைய சமூகத்தினர் மற்றவர்களுடன் பழகவும் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தவும் இத்தகைய விளையாட்டு நடவடிக்கைகள் வழிவகுக்கும்.
கற்றுக்கொள்ளும் அதேநேரத்தில் ஒருவரால் பிறரை வழிநடத்தவும் வாய்ப்புகள் உருவாகும்.
அறிவுசார் குறைபாடு உள்ளோர் மற்றவர்களுடன் பழகும் வாய்ப்பை இழக்கின்றனர் என்றும் தங்களின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே கலந்துறவாடுகிறார்கள் என்றும் உடற்குறையாளர்களுக்கான அனைத்துலக ஒலிம்பிக் அமைப்பின் ஆசிய பசிபிக் வட்டாரத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான திரு தீபக் நட்டாலி குறிப்பிட்டார்.
யாவருக்கும் விளையாட்டு நடவடிக்கைகள் அதிகப் பலன் தர வல்லவை என்று குறிப்பிட்ட அவர், குழு உணர்வும் புரிந்துணர்வும் வளர்வதற்கான வாய்ப்பும் உள்ளது என்றார்.
குறைபாடுள்ளோர் வாரத்தில் 150 முதல் 300 நிமிட உடற்பயிற்சியில் ஈடுபடலாம் என்று கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட சிங்கப்பூர் உடற்பயிற்சி வழிகாட்டுதல்கள் பரிந்துரை செய்கின்றன.
அதோடு 2022ஆம் ஆண்டு வரை கிடைத்த தகவலின்படி குறைபாடுள்ள இருவரில் ஒருவராவது விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்றும் 2016ல் மூவரில் ஒருவர் மட்டுமே இவ்வாறு ஈடுபட்டனர் என்றும் அறியப்படுகிறது.
விளையாட்டு நடவடிக்கைகள் இடம்பெறும் இடங்களுக்குக் குறைபாடு உள்ளவர்கள் பயணித்தல், அவர்களுக்கான சிறப்பு விளையாட்டுச் சாதனங்களைப் பயன்படுத்தக் கூடுதல் செலவைச் சமாளித்தல், மேலும் அதிகமான பயிற்சிபெற்ற ஆசிரியர்களும் தொண்டூழியர்களும் தேவைப்படுதல் போன்ற சவால்கள் இருக்கவே செய்கின்றன. அவற்றைக் கடந்துவந்து இன்று குறைபாடுள்ள பலரும் தங்களுக்கு விருப்பமான விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதை நாம் ஆதரிப்பது முக்கியம்.

