விமான ஊழியர்கள் பலமுறை நினைவூட்டியபோதும் விமானத்தில் கைப்பேசிகளைப் பயன்படுத்துவோர் இருக்கவே செய்கின்றனர். ஆனால் கைப்பேசிதானே, என்ன ஆகிவிடப் போகிறது என்று அலட்சியம் வேண்டாம் என்கிறார் ஒரு நிபுணர்.
ரச்சனா வேலாயுதம்
வெளிநாட்டுப் பயணங்களின்போது விமான நுழைவுச்சீட்டுகளை வாங்குவது, சுற்றுலாவைத் திட்டமிடுவது என பலவற்றுக்கும் கைப்பேசிகளையே பலரும் இன்று நம்புகின்றனர்.
விமானத்தில் ஏறியபிறகும், அன்புக்குரியவர்களுடன் பேசுவது, கடைசி நேர ஏற்பாடுகளைச் செய்வது ஆகியவற்றில் பரபரப்பாக ஈடுபடுவது வழக்கம்.
மணிக்கணக்காக நீடிக்கும் விமானப் பயணத்தில் பாடல்கள், காணொளிகள், விளையாட்டுகள் போன்றவற்றுக்கு பயணிகளின் உற்ற தோழனாக இருப்பது கைப்பேசிதான்.
ஆனால், விமானத்தில் பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய அவர்கள் கைப்பேசிகளை 'ஏர்பிளேன் மோட்' எனப்படும் விமானப் பயண நிலையில் வைக்கவோ அணைத்துவிடவோ மறக்கக் கூடாது என்று நினைவூட்டினார் சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்தில் பணியாற்றும் இணைப் பேராசிரியர் நீலகண்டம் வெங்கடராயலு.
மின்னணு, கணினி பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற இவர், பொறியியல் துறையில் நீண்டகாலமாக பணிபுரிந்து வருகிறார்.
"நம் விமானப் பயணம் சுமுகமாகவும் பாதுகாப்பாகவும் தொடர வேறு அதிர்வெண்கள் கொண்ட கதிர்வீச்சுகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பில் இருக்கக் கூடாது. அவை தொடர்பில் இருந்தால் ஆகாயத்தில் இருக்கும் விமானத்திற்கு வரும் பிரச்சினைகளை எளிதில் சமாளிக்க முடியாது." என்றார் டாக்டர் நீலகண்டம்.
ஒரு விமானப் பயணத்திற்கு முன்பு, மின்னணுச் சாதனங்களை விமானப் பயண நிலையில் வைக்கவோ அணைத்து விடவோ விமான ஊழியர்கள் பயணி களுக்கு நினைவூட்டுவர்.
குறிப்பாக விமானம் ஆகாயத்தில் மேலே ஏறும்போதும் தரை இறங்கும்போதும் மடிகணினி, கைப்பேசிகள், மின்நூல் சாதனங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தக்கூடாது என்று அவர்கள் கூறுவர். விமானத்தில் வெளியாகும் கதிர்வீச்சுக்கும் கைப்பேசிகள் வெளியிடும் மின்காந்த அலைகளுக்கும் இடையேயுள்ள தொடர்பை டாக்டர் நீலகண்டம் விளக்கினார்.
"கைப்பேசிகளை விமானப் பயண நிலையில் வைக்கும்போது அது குறைவான மின்காந்த அலைகளை வெளியேற்றும். இதனால், விமானம் வெளியேற்றும் கதிர்வீச்சுகளுடன் கைப்பேசி யின் கதிர்வீச்சு குறுக்கிடாது.
விமானத்தைச் செலுத்துவதற்கான திசைகாட்டி கட்டமைப்பு உட்பட விமானத்தின் முக்கிய தொழில்நுட்பக் கட்டமைப்புகளை கைப்பேசியின் மின்காந்த அலைகள் பாதிக்காமல் இருக்க இந்த ஆலோசனைகள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பயணிகளிடம் வலி யுறுத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
அண்மையில் ஸ்கூட் விமானத்தில் மின்னேற்றி ஒன்று வெடித்து தீப் பிடித்துக்கொண்ட சம்பவத்தையும் டாக்டர் நீலகண்டம் சுட்டினார். பயணி ஒருவர் வைத்திருந்த மின்னேற்றி அளவுக்கு அதிகமாகச் சூடேறியதால் அது வெடித்தது.
"இந்த மின் பொருள்களை நாம் சரியான முறையில் நேரத்திற்கு ஏற்ப மின்னேற்றம் செய்ய வேண்டும். இந்த மின்னிலக்க சாதனங்களை கவனமாகக் கையாண்டால் இதுபோன்ற அசம்பாவிதங்களை தவிர்க்கலாம்" என்றும் டாக்டர் நீலகண்டம் கூறினார்.

