எதிர்வரும் மார்ச் பள்ளி விடுமுறையின்போது சிறுவர்கள் மகிழ எஸ்பிளனேட் கலைரயங்கம் 'மார்ச் ஆன்' எனும் அதன் சிறுவர் விழாவுக்கு மார்ச் 9 முதல் 19ஆம் தேதிவரை ஏற்பாடு செய்துள்ளது. மூன்றாவது ஆண்டாக இவ்விழா நடைபெறுகிறது. மேலும், விழா 13 நிகழ்ச்சிகளையும் கண்காட்சிகளையும் கொண்டிருக்கும். சிறுவர் விழாவுக்கான திட்டங்களை 2016ஆம் ஆண்டிலேயே எஸ்பிளனேட் தொடங்கியது. கொவிட்-19 பரவலால் கடும் கட்டுப்பாடுகளுடன் விழா 2021இல் முதன்முறையாகவும் 2022ல் இரண்டாவது முறையாகவும் அது நடைபெற்றது.
சிறுவர் விழா எவ்வாறு நடைபெறும் என்று முதன்முதலில் திட்டமிட்டதற்கு ஏற்ப இவ்வாண்டு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும் சிறுவர்களை மையமாகக் கொண்டு அவர்கள் பங்கேற்கும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றும் விழாவின் தலைமைத் தயாரிப்பாளர் ரேச்சல் லிம் கூறினார்.
பிள்ளைகள் முதன்முறையாகப் பள்ளிக்கூடம் செல்வது சிறுவர்களுக்கும் பெற்றோருக்கும் ஒரு மைல்கல் மட்டுமல்ல அது அவர்கள் இருதரப்பினரும் பயம்கொள்ளும் அனுபவமும்கூட. அந்த அனுபவம் 'மார்ச் ஆன்' விழாவில் நாடகமாக மேடையேற்றப்படும். 'தி பிகினிங் ஆஃப் எனிதிங்' என்ற தலைப்பு கொண்ட நாடகத்தை மிஷெல் டான் எழுதியுள்ளார். எடித் பொடெஸ்டா அதை இயக்குகிறார். ஆறு வயது ஷானின் சித்திரங்கள் உயிரோவியங்களாக உருமாற்றப்பட்டு மேடையில் காட்சிக்கு வைக்கப்படும்.
நிகழ்ச்சியைப் பார்க்கும் சிறுவர்களும் கதையில் ஓர் அங்கமாகி நடிக்க வகைசெய்யும் சேஞ்லிங் என்ற நாடகம் விழாவில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் ஒன்று. 20 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல்போன நடிம் என்ற சிறுவனின் கனவுகளுக்கு உள்ளேயும் மாய உலகின் உள்ளேயும் கதை சிறுவர்களை இழுத்துச் செல்லும் என்று ஏற்பாட்டாளர்கள் கூறினர்.
மேலும் 'வீ டச், வீ பிளே, வீ டான்ஸ் எனும்' தலைமைப்பிலான நடன நிகழ்ச்சி, பாதுகாப்பான தொடுதல் உணர்வு என்ன என்பதை ஆராயும். இது சிசுக்களுக்கும் மழலைகளுக்குமான நிகழ்ச்சியாகும்.
'மார்ச் ஆன்' விழா எஸ்பிளனேடின் பல்வேறு பகுதிகளில் மார்ச் 9 முதல் 19ஆம் தேதி வரை நடைபெறும். இலவச நிகழ்ச்சிகளும் கட்டணத்துடன்கூடிய நிகழ்ச்சிகளும் உண்டு.
விழா பற்றிய மேல்விவரங்களுக்கு:
https://str.sg/wvbg

