ஜாலான் புசார் மற்றும் கம்போங் கிளாம் சமூக மன்றங்களின் இந்தியர் நற்பணிச்செயற்குழுக்கள் இணைந்து ஆனந்தப்பொங்கல் என்ற பெயரில் பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சியை நடத்தியுள்ளன. இந்நிகழ்ச்சி பிப்ரவரி 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை ஜாலான் பசார் சமூக மன்ற வளாகத்தில் நடைபெற்றது.
லெவண்டர் எம்ஆர்டி நிலையத்திற்கு அருகில் உள்ள இந்த சமூக மன்றத்தில் காலை முதலே குடியிருப்பாளர்களும் நண்பர்களும் கூடத்தொடங்கினர். சிறப்புவிருந்தினராக ஜாலான் புசார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் மத்திய சிங்கப்பூர் மாவட்ட மேயருமான திருவாட்டி டென்னிஸ் புவா கலந்துகொண்டார். திருவாட்டி புவா பொங்கல் அடுப்பைப் பற்றவைத்து கொண்டாட்டத்தைத் தொடங்கியதுடன் அங்கிருந்த குடியிருப்பாளர்களுடன் பொங்கல் நல்வாழ்த்துளைப் பரிமாறிக் கொண்டார்.
பொங்கல் கொண்டாட்டத்தை ஒட்டி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட சிறிய மண்பானை வண்ணம் தீட்டும் போட்டி, பெரியவர்களுக்கான வண்ணக்கோலப்போட்டி ஆகியவை நடைபெற்று, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பாரம்பரிய நடனம், பாடல் போன்ற கலைநிகழ்ச்சிகளோடு குடியிருப்பாளர்களை ஒன்றிணைக்கும் மேடை விளையாட்டுகளும் நடத்தப்பட்டன.
சிறப்பு நிகழ்வாக, "நிம்மதியான வாழ்க்கைக்கு பெரிதும் காரணமாயிருப்பது நோயற்ற வாழ்வா? குறைவற்ற செல்வமா?" என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.
நடுவராக அ. முஹம்மது பிலாலும் பேச்சாளர்களாக மஹ்ஜபீன், ஸ்வர்ணலதா ஆவுடையப்பன், வெண்ணிலா அசோகன், அப்துல் மாலிக், சிம் பல்கலைக்கழக மாணவி முத்து சுவேதா, குவாங்யாங் உயர்நிலைப்பள்ளி மாணவர் நவ்ஃபல் துல்கர்னை ஆகியோரும் பங்கெடுத்தனர். பட்டிமன்றத்தை இளம்பிறை இலக்கிய வட்டம் ஒருங்கிணைத்திருந்தது.
பேசும் கலை வளர்ப்போம் மன்றம் மாதந்தோறும் மூன்றாவது சனிக்கிழமை மாலை ஜாலான் பசார் சமூக மன்றத்தில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நடைபெற்று வருவதை ஏற்பாட்டாளர்கள் குடியிருப் பாளர்களுக்கு நினைவுபடுத்தினர். மாணவர்கள், இளையர்களுக்குப் பயன்பட்டுவரும் இத்தளத்தைத் தாங்களும் பயன்படுத்திக்கொள்ளும்படி அவர்கள் குடியிருப்பாளர்களைக் கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சி சுமார் நான்கரை மணிநேரம் நடைபெற்றது.
- செய்தி: ஜாலான் புசார்,
கம்போங் கிளாம் சமூக மன்ற இந்திய நற்பணிச்
செயற்குழுக்கள்.

