அறிவார்ந்த கைக்கடிகாரம் போன்ற அணியக்கூடிய மின்னணுச் சாதனங்கள் சிலவற்றால், இதயத்தில் பொருத்தப்பட்டுள்ள செயற்கை இதய முடுக்கி, இதயத் துடிப்பைச் சீராக்கும் இயந்திரம் போன்றவற்றுக்கு இடையூறு ஏற்படலாம் என்று புதிய ஆய்வு ஒன்று கூறியுள்ளது.
'ஹார்ட் ரிதம்' எனும் ஆய்விதழில் ஆய்வு வெளியிடப்பட்டது.
அமெரிக்காவின் யூட்டா பல் கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள், இதயத்தில் பொருத்தப்படும் சாதனங்களை, சிலவகை அணியக்கூடிய மின்னணுச் சாதனங்களில் உள்ள உணர் தொழில்நுட்பம் எவ்வாறு பாதிக்கும் என்பதை ஆராய்ந்தனர். 'பயோஇம்பெடன்ஸ்' என்பது அந்த உணர் தொழில்நுட்பத்தின் பெயராகும்.
சாதனத்தை அணிந்துள்ளவரின் உடலில் எலும்புகளுடன் கூடிய தசைகளின் எடையைக் கணிக்க இந்த உணர் தொழில்நுட்பம் வெளியிடும் மின்னோட்டம் பயன்படுகிறது.
அணியக்கூடிய மின்னணுச் சாதனங்களிலிருந்து வெளிவரும் மின்னோட்டம், இதயத்தில் பொருத்தப்பட்ட கருவிகளைக் குழப்பி அவை சரியாகச் செயல் படுவதைத் தடுக்கலாம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டது.
குறிப்பாக இந்த மின்னோட்டம், இதயத்தில் பொருத்தப்பட்ட இதயத் துடிப்பைச் சீராக்கும் இயந்திரத்தை ஏமாற்றி நோயாளிக்கு மிகவும் வலியை உண்டாக்கும் மின் அதிர்வுகளை ஏற்படுத்த வல்லது ஏன்று ஆய்வாளர்கள் கூறினர்.
கைப்பேசிகள் வெளியிடும் மின்காந்த அலைகள், இதயத் துடிப்புக் கருவிகளின் இயக்கத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் என்று ஏற்கெனவே கூறப்பட்டு வருகிறது. ஆனால் அணியக்கூடிய மின்னணுச் சாதனங்களில் உள்ள உணர் தொழில்நுட்பத்தால் ஏற்படும் பிரச்சினைகளை ஆராய்ந்த முதல் ஆய்வு இதுவாகும்.
ஆய்வை மேற்கொண்டவர்களில் ஒருவரான பெஞ்சமின் ஸ்டைன்பெர்க், சில நோயாளிகள் உயிர்வாழ்வதற்கு இதயத் துடிப்புக் கருவிகளை நம்பி இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.
இதயத் துடிப்புக் கருவிகள் மின்னோட்டத்தால் குழப்பம் அடைந்தால் அவை செயல் படுவதை நிறுத்தலாம். அவை நீண்டநேரம் செயல்படாது இருந்தால், நோயாளிகள் மயக்கம் அடையலாம் அல்லது கடும் விளைவுகள் ஏற்படலாம் என்று அவர் எச்சரித்தார்.

