இயந்திர மனிதர் அடுத்த பத்தாண்டுகளில் கணிசமான வீட்டு வேலைகளைச் செய்யும் ஆற்றலைப் பெறும் என்று ஆய்வு ஒன்று கூறியுள்ளது. புளோஸ் ஒன் எனும் ஆய்விதழில் அந்த ஆய்வு வெளியிடப்பட்டது. 2033ஆம் ஆண்டுக்குள் வீட்டு வேலைகளில் 39 விழுக்காட்டை இயந்திர மனிதர்செய்யும் என்று ஆய்வு தெரிவித்தது.
பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ஜப்பானின் ஒச்சனோமிஸு பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த ஆய்வாளர்கள், 10 ஆண்டுகளில் வழக்கமான வீட்டுவேலைகள் எந்த அளவுக்கு இயந்திரமயமாகும் என்று முன்னுரைக்கும்படி செயற்கை நுண்ணறிவு நிபுணர்கள் 65 பேரிடம் கேட்டனர்.
மளிகைப் பொருள்கள் வாங்குவதே ஆக அதிகமாக இயந்திரமயமாகும் என்றும் மளிகைப் பொருள்கள் வாங்குவதில் செலவிடும் நேரம் சுமார் 60 விழுக்காடு குறையும் என்றும் ஆய்வு கூறியது.
மாறாக, சிறுவர்களையும் முதியவர்களையும் பராமரித்துக் கொள்ளும் வேலை ஆகக் குறைவாக பாதிக்கப்படும் என்று நிபுணர்கள் முன்னுரைத்தனர்.
பிள்ளைகளுக்குக் கற்றுத் தருவது, அவர்களுடன் செல்வது, வயதான குடும்ப உறுப்பினரை கவனித்துக்கொள்வது ஆகியவற்றில் 28 விழுக்காட்டு வேலைகள் மட்டுமே இயந்திரங்கள் செய்யும் என்று ஆய்வு கூறியது.
இயந்திர மனிதர்களால் மனிதர்களின் வேலை போகுமா அல்லது அவை ஊதியமில்லா வீட்டுவேலைகளில் மனிதர்களுக்கு உதவியாக இருக்குமா என்று ஆய்வாளர்கள் கேட்டனர்.
வீட்டுவேலைகள் செய்யும் இயந்திரங்கள், உதாரணத்துக்கு தரையைச் சுத்தம் செய்யும் இயந்திரங்கள், உலகிலேயே ஆக அதிகமான எண்ணிக்கையில் உற்பத்தி செய்யப்பட்டு விற்கப் படுவதாக ஆய்வில் கலந்து கொண்ட நிபுணர்கள் பலரும் சுட்டிக்காட்டினர்.
பெரியவர்கள் வேலை அல்லது படிப்பிற்கான தங்கள் நேரத்தில் 43 விழுக்காட்டைத் தற்போது வீட்டுவேலை செய்வதற்காக ஒதுக்குகின்றனர் என்று கூறப் படுகிறது.
சம்பளம் இல்லா வீட்டுவேலைகளைப் பெரும்பாலும் பெண்களே செய்கின்றனர். அதனால், பெண்களின் வருவாய், சேமிப்பு, ஓய்வூதியம் போன்றவை பாதிக்கப்படும் என்று முந்தைய பல ஆய்வுகள் கூறியுள்ளன.
வீட்டுவேலைகள் இயந்திரமயமானால் பெண்களுக்குக் கூடுதல் நேரம் கிடைக்கும் என்றும் பாலின சமத்துவம் பெருகும் என்றும் அண்மைய ஆய்வை மேற்கொண்ட பிரிட்டிஷ், ஜப்பானிய ஆய்வாளர்கள் நம்புகின்றனர். எனினும், இயந்திரங்களை வாங்க அதிகச் செலவாகும். என்பதால் பணம் படைத்தவர் களுக்கு மட்டுமே ஓய்வுநேரம் கிடைக்கும் சூழல் உருவாகலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரித்தனர்.
அதே நேரம், வீட்டில் உள்ளவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைக் கண்காணித்துக் கூறும் ஆற்றல் இயந்திரங்களுக்கு உள்ளது. அத்தகைய ஆற்றல் பெற்ற பற்பல இயந்திரங்கள் வீடுகளில் நிறைந்திருந்து நோட்டமிடுவதை அனுமதிக்க மனிதச் சமூகம் இன்னும் தயாராகவில்லை என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர்.

