வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டில் வசிக்கும் நிலையில், சிலர் இல்லம் சார்ந்த வர்த்தகத்தில் ஈடுபடத் தயங்கலாம். அதற்கு அனுமதி பெறவேண்டுமா என்ற சந்தேகமும் நிலவலாம்.
கூடுதல் வருமானம் ஈட்ட விரும்புவோர், சிறிய அளவிலான இல்லம் சார்ந்த வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்றும் இதற்கு வீவகவிடமிருந்து அனுமதி பெறத் தேவையில்லை என்றும் வீவகவின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், வர்த்தகர்கள் ஒருசில நிபந்தனைகளைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
வர்த்தகத்திற்கு வீடு பயன்படுத்தப்பட்டாலும், முக்கியமாகக் குடியிருப்பதற்காகவே அந்த வீடு இருத்தல் வேண்டும். அத்துடன் வீட்டில் நடக்கும் வர்த்தக நடவடிக்கைகள் எதுவும் அருகிலுள்ள அண்டைவீட்டாரைப் பாதிக்காத வண்ணம் இருக்கவேண்டும்.
இல்லையேல், வர்த்தகர் தமது செயல்பாடுகளை உடனே நிறுத்திக்கொண்டு இதற்காகவே அமைக்கப்பட்டுள்ள வர்த்தக வளாகங்களுக்கு இடம் மாற வேண்டியிருக்கும்.
வீட்டின் உரிமையாளர் அல்லது அங்கு தங்குவதாகப் பதிவான உறுப்பினர் வர்த்தகத்தை மேற்கொள்ள வேண்டும். அந்த வீட்டில் வசிக்காதவர் அல்லது மூன்றாம் தரப்பினர் வீட்டில் வேலை செய்வது அனுமதிக்கப்படாது.
வீவக வீட்டில் விளம்பரங்கள், சுவரொட்டிகள் போன்றவற்றை வைப்பதும் அனுமதிக்கப்படாது.
வர்த்தகச் செயல்பாடுகளால் சுற்றியுள்ளோருக்கு எவ்விதப் பாதக பாதிப்புகளும் ஏற்படக்கூடாது. இரைச்சல், புகை, துர்நாற்றம், குப்பை, தூசு போன்றவற்றை இது குறிக்கும். வீட்டுப் பயன்பாட்டுக்கு அல்லாத கனரக பொருள்களையும் சாதனங்களையும் பயன்படுத்தக்கூடாது. அதிகளவிலான சரக்குகளை இடம் மாற்றுவதற்கு வீட்டைப் பயன்படுத்துவதும் கூடாது.
உணவுப் பொருள் தொடர்பான வர்த்தகம் என்றால் சிங்கப்பூர் உணவு அமைப்பு போன்றவற்றின் விதிமுறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டு வர்த்தக நடவடிக்கைகள் நடைபெற வேண்டும்.
இதன்படி வீவக வீட்டில் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய இல்லம் சார்ந்த வர்த்தக நடவடிக்கைகளில் சில:
குறைந்த அளவில் 'பேக்கிங்' செய்தல் போன்ற உணவு வர்த்தக நடவடிக்கைகள் அனுமதிக்கப்படுகின்றன.
அத்துடன் சிகை அலங்காரம், சருமத்துக்கான சிகிச்சை, அழகுப் பராமரிப்பு, கை மற்றும் கால் நகப் பராமரிப்புச் சேவைகள் போன்றவையும் அனுமதிக்கப்படுகின்றன. இருப்பினும் வீவக வீடுகளில் உடற்பிடிப்புச் சேவைகளுக்கு அனுமதியில்லை.
சிலர் துணைப்பாட வகுப்பை வீவக வீட்டில் நடத்தி வரலாம். இது அனுமதிக்கப்பட்டாலும் ஒரே நேரத்தில் மூன்று மாணவர்களுக்கு மேல் ஒரு துணைப்பாட வகுப்பில் இருக்க முடியாது என்ற நிபந்தனை உள்ளது. தையல் சேவைகளையும் வீவக வீட்டில் வழங்கலாம்.
அத்துடன் தன்னுரிமை ஓவியர், செய்தியாளர், புகைப்படக் கலைஞர், எழுத்தாளர் போன்றோரும் தங்களின் வீவக வீட்டை இல்லம் சார்ந்த வர்த்தகத் திட்டத்தின் கீழ் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
இல்லம் சார்ந்த அலுவலகத் திட்டத்தின்படி வீவக வீட்டில் ஒருவர் தமது அலுவலகத்தை அமைத்துக்கொள்ளலாம். இருப்பினும் இதற்கு அவர் அனுமதி பெறவேண்டும்.
அவ்வீட்டில் வசிக்காத இரு ஊழியர்கள் வரை வீட்டில் வேலைசெய்ய அனுமதிக்க முடியும். இருப்பினும் கணக்கியல், நிறுவனக் கட்டுப்பாட்டு ஆணையத்துடன் அவ்வர்த்தகம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

