எடுத்த காரியத்தில் உடனே வெற்றி காண வேண்டும் என நாம் சிறு பிள்ளையாக இருந்தபோது எண்ணியிருக்கமாட்டோம். கீழே விழுவது, காயம் ஏற்படுவது, தவறுகள் செய்வது என உலகமறிந்து நடந்துகொள்வதற்கு ஏற்ற வாழ்க்கைத் திறன்களைக் கற்றுக்கொண்டு வந்தோம்.
குழந்தை யூடியூப் காணொளி ஒன்றைப் பார்த்து ஒரே நாளில் நடக்கக் கற்றுக்கொள்வதைக் கற்பனை செய்து பாருங்கள். அல்லது ஒரு சிறுவன் மிதிவண்டியை ஐந்தே நிமிடங்களில் ஓட்டக் கற்றுக்கொள்வது? சாத்தியமில்லை.
கீழே விழுவது, சரியாகச் செய்யாதது, பயிற்சி செய்து செய்து ஒன்றில் சிறந்து விளங்குவது ஆகியவை நம்மை மேம்படுத்தக்கூடிய பாடங்கள்.
இருப்பினும், அண்மைய ஆண்டுகளாக பிள்ளையின் தன்னம்பிக்கையைக் கூட்டுவதற்குப் பெரியவர்கள், எந்நேரமும் பாராட்டு மழையைப் பொழிகின்றனர். இதனால் 'பாராட்டு' அதன் மதிப்பை இழந்துவிட்டதாக ஸ்டான்ஃபர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் கேரல் டுவெக் குறிப்பிட்டுள்ளார்.
பாராட்டு தேவைப்படாத தருணங்களில் பிள்ளைகளைப் பாராட்டும்போது அவர்கள் அதற்கு அடிமையாக, எந்நேரமும் பாராட்டையே நாடுகிறார்கள்.
மேலும், அதிக முயற்சி எடுக்காமல் பிள்ளை சரியாகச் செய்திடும் ஒரு செயலுக்கு, சில பெற்றோர்கள் 'அறிவாளி' என்று பெயரிடும்போது நிலைமையை இன்னும் மோசமாக்கிவிடுகிறது என்றார் பேராசிரியர்.
இதனால் முயற்சி அதிகம் தேவைப்படாத வெற்றி தங்களுக்குக் கிடைத்தால் போதும் என்ற மனநிலையைப் பிள்ளைகள் பெற்றுவிடுகின்றனர். அந்த மனநிலை வந்ததும் புதியனவற்றைச் செய்து பார்த்து அதில் தேறாத நிலை ஏற்படுவதில் பிள்ளைகளுக்கு விருப்பம் இருக்காது.
எனவே, ஒரே நாளில் கற்றல் நிகழ்ந்துவிடாது என்ற உண்மையைப் பிள்ளைகளிடத்தில் உணர்த்துவது அவசியம்.
வயலின் வாசித்தல், கணினி நிரலாக்கம் போன்ற திறமைகளில் நிபுணத்துவ நிலையை அடைவதற்கு 10,000 மணி நேரக் கடும்பயிற்சி தேவை என்று மால்கம் கிலேவெல் என்ற எழுத்தாளர் கூறியுள்ளார். மூன்றரை ஆண்டுகளாக ஒவ்வொரு நாளிலும் 8 மணி நேரப் பயிற்சியை விடாமல் செய்வதற்கு இது சமம். இதுவே வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும்.
செயற்கை நுண்ணறிவு, அதிநவீனத் தொழில்நுட்பம் ஆகியவற்றுடன் வேகமாக உலகம் சுழன்றுகொண்டிருக்க, மனிதர்கள் தங்களின் சுய முன்னேற்றத்தில் கவனம் செலுத்திப் போட்டியிட வேண்டியுள்ளது.
வளர்ச்சியில் கவனம் செலுத்தும் பிள்ளைகளே பின்னாளில் வேலையிடத்தில் சூழலுக்கேற்ப மாறியவாறு சிறந்து விளங்கி வெற்றி காண்பர்.
நம் பிள்ளைகள் நிபுணர்கள் ஆவதற்கு இன்னும் பல ஆண்டுகள் உள்ளன என்பதைப் பெற்றோர் முதலில் உணரவேண்டும். அதன் அடிப்படையில் ஆறுதல் கூறியும் தட்டிக்கொடுத்தும் பிள்ளைகளுக்கு உற்சாகம் ஊட்டலாம்.
அதனால், தோல்வியைத் தழுவும் வாய்ப்பையும் பிள்ளைகளுக்கு நாம் தருவதில் தவறில்லை.
செய்தி: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

