குழந்தை பிறந்ததும் பெற்றோர் என்ற புதிய பதவி ஒருவருக்குக் கிடைத்துவிடுகிறது. ஆனால் பெற்றோர் என்ற பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கு ஒருவர் தம் வாழ்க்கையில் செய்யும் மாற்றம் மிகப் பெரியது என்று மனித வளர்ச்சியை ஆராயும் அறிவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
புதிதாகப் பெற்றோர் ஆன ஒருவரின் வாழ்க்கையில் மூளை, குணம், அடையாளம், உறவுகள் எனப் பல அம்சங்கள் மாற்றங்களுக்கு உள்ளாகும்.
ஆதரவு இன்றி, உறவுகள் பாதிக்கப்பட்டு மன அழுத்தமும் நேரலாம். இந்த மன அழுத்தம் குழந்தையின் அம்மாவுக்கு மட்டுமின்றி அப்பாவுக்கும் ஏற்படலாம். புதுப் பெற்றோர் என்ற நிலையில் நமது உணர்வுகள், உடல், வாழ்க்கை ஆகியவை அடையும் மாற்றங்கள் குறித்தும் அந்த மாற்றங்களைச் சமாளிக்கும் வழிமுறைகள் குறித்தும் இனிக் காண்போம்.
1. உணர்வுரீதியாக நமது மூளை
நம்மைத் தயார்ப்படுத்தும்
புதுப் பெற்றோர் எந்நேரமும் விழிப்புநிலையில் இருப்பர். குழந்தையின் பாதுகாப்பு அதிக முக்கியத்துவம் பெறும். குழந்தையை அணைத்திருக்கும்போது நிம்மதி கலந்த மகிழ்ச்சியை உணர்வர். தொடர்ந்து நல்ல பெற்றோராக இருக்கவேண்டும் என்ற உற்சாகத்துடன் இருப்பர். இந்த உணர்வுகளை மூளையின் வெவ்வேறு பகுதிகளில் காணப்பட்ட மாற்றங்கள் ஏற்படுத்தியதாக 2014ஆம் ஆண்டில் நடத்திய ஆய்வுவழி ரூத் ஃபெல்ட்மன் என்ற இஸ்ரேலிய ஆய்வாளர் கண்டறிந்தார்.
2. குழந்தையின் தேவைகளை
மேலும் நன்கு அறிதல்
குழந்தையுடன் ஏற்படும் உணர்வுரீதியான பந்தத்தால் அக்குழந்தை பேச முடியாத நிலையிலும் பெற்றோரால் அதன் தேவைகளை அறிந்துகொள்ள முடிகிறது.
3. உணர்வும் சிந்தனையும்
பராமரிக்க உதவும்
ஒரே சமயத்தில் வெவ்வேறு வேலைகளைச் செய்யும் ஆற்றலைப் புதுப் பெற்றோர் பெறத் தொடங்குவர். அதாவது, குழந்தையைப் பாதுகாத்தல், குழந்தைக்கு ஏற்ப மாறிக்கொள்ளுதல், குழந்தைக்காக திட்டமிடுதல் போன்றவற்றுக்குப் புதுப் பெற்றோர் முன்னுரிமை தருவர்.
குழந்தைப் பராமரிப்பு தொடர்பில் அன்னையருக்கு உணர்வுரீதியான மாற்றம் அதிகம் இருப்பதுபோல் தந்தையருக்குக் குழந்தைப் பாதுகாப்பு தொடர்பான சிந்தனை அதிகம் இருக்கும் என்று ஆய்வாளர் ரூத் கண்டறிந்தார்.
4. மன அழுத்தம் குறையும்,
நினைவாற்றலும் குறையும்
குழந்தையின் தேவைகளை அறிந்துகொள்வதற்குத் தயாராகும் மகளிர் தங்களின் கர்ப்ப காலத்தின் பின்பாதியில் சற்று மன அமைதி அடைவர் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. குழந்தையின் தேவைகளை அறிந்துகொள்வதற்கு அவர்கள் தயாராவதால் தங்களின் உடல்ரீதியான, மனரீதியான அழுத்தங்களைப் பின்னுக்குத் தள்ளுவதே காரணம் என்கிறது ஆய்வு.
இருப்பினும், அதனுடன் பெண்ணின் நினைவாற்றலும் பாதிப்படைவதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட 17 ஆய்வுகளில் 80% மகளிருக்கு நினைவாற்றல் கர்ப்ப காலத்திலும் குழந்தைப் பிறப்புக்குப் பிந்திய காலத்திலும் இருந்ததாகக் கண்டறியப்பட்டது.
5. வாழ்க்கை மேலும் அர்த்தமுள்ளதாகும்
அதுவரை சிறுசிறு பிரச்சினைகளுக்கு அலட்டிக்கொண்டிருந்தோர், ஒரு குழந்தை வந்ததும் தனிநபராக வளர்ச்சி காண்பர். தன் வாழ்க்கையைப் பற்றியும் தன் எதிர்காலத்தைப் பற்றியும் சிந்திக்கத் தொடங்குவர். யாருக்காக வேலை செய்கிறோம், யாருக்காக வாழ்கிறோம் என்ற சிந்தனை முதிர்ச்சி பிறக்கும். நம்மை நம்பி ஒரு குழந்தை வந்துவிட்டது என எண்ணும்போது கூடுதல் பொறுப்புணர்வும் கவனமும் புதுப் பெற்றோர் மனதில் தோன்றும்.
6. உடல், மன ரீதியான
சவால்கள் அதிகமாகும்
காயம் ஆறுதல், தாய்ப்பால் தருதல், களைப்பு, தூக்கமின்மை, உணவுமுறையில் மாற்றம் எனக் குழந்தைப் பிறப்புக்குப் பின் மகளிர் அனுபவிப்பவை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சவால் விடுக்கலாம்.
பெற்றோர் ஆகிவிட்டோம் என்பதால் அதிகளவு எதிர்பார்ப்புகளைத் தங்கள் மீதே திணிப்பதைக் குறைத்துக்கொள்வது உதவும். ஆதரவுக்காக குடும்ப உறுப்பினர்களின் உதவியை நாடலாம்.
7. கணவன் மனைவி உறவுக்குச்
சோதனை வரலாம்
புதுக் குழந்தையால் கணவன் மனைவி இடையே உள்ள உறவு பாதிக்கப்படலாம் என்கின்றனர் குடும்பநல நிபுணர்கள். அதுவரை தம்பதியாக இருந்தவர்கள் புதிதாகப் பிறக்கும் ஒரு குழந்தையால் அந்த நிலையை இழக்கின்றனர்.
செலவுகளைச் சமாளித்தல், குழந்தைப் பராமரிப்புக்கு நேரம் ஒதுக்குதல், மகப்பேறு விடுப்புக்குப் பின் வேலைக்குத் திரும்புதல் எனத் தங்களின் அணுக்கமான உறவு சோதனைக்கு உள்ளாவதை உணரும்போது மேலும் எவ்வாறு இணைந்து குழந்தைப் பராமரிப்புக்காக குழு உணர்வுடன் செயல்படலாம் என்று புதுப் பெற்றோர் சிந்திக்க வேண்டும்.
8. நண்பர்கள், உறவினர்களை
இழக்கக்கூடும்
புதுப் பெற்றோருக்கு நேரம் ஓர் எதிரியாகிவிடலாம். உறவினர்களுடனும் நண்பர்களுடனும் முன்புபோல் பழகுவதற்கு நேரம் கிடைக்காமல் போகலாம்.
பெற்றோர் ஆன பிறகு, இத்தகைய உல்லாச ஒன்றுகூடல்களுக்கு நேரம் ஒதுக்க மனம் வராது என்பதே உண்மை. இருப்பினும், மன அழுத்தம் அதிகமாகும்போது நண்பர்களைச் சந்தித்துப் பேசுவது ஆறுதல் தரலாம்.
நலன் பேணுதல் முக்கியம்
பொறுப்புகள் கூடிவிட்டதால் குழந்தை மீது கவனம் செலுத்தி தங்களைப் பற்றி புதுப் பெற்றோர் மறந்துவிடக்கூடாது. தங்களின் தேவைகளையும் முக்கியமாகக் கருதி நலன் பேண வேண்டும்.
நாம் நன்றாக இருந்தால்தான் நம்மை நம்பியுள்ள குழந்தையை நன்றாகப் பார்த்துக்கொள்ள முடியும் என்பதை மறந்துவிடக்கூடாது.

