பொன்மணி உதயகுமார்
உலக மகளிர் தினம் மார்ச் மாதம் 8ஆம் தேதியன்று அனுசரிக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு பெண்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்தும் வகையில் 'பெண்மை உலகின் பெருமை' என்ற சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
'ஏசிஇ இன்டர்நேஷனல் பிரைவெட் லிமிடட்', சித்திரை ஃபார் ஈஸ்ட் தமிழ் பிஸ்னஸ் கனெக்ட் ஆகியவை இணைந்து நிகழ்ச்சியினை வழங்குகின்றன.
நிகழ்ச்சி அடுத்த மாதம் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு நடைபெறும். நிகழ்ச்சி நடைபெறும் இடம் தொடர்பான விவரம் பின்னர் பங்கேற்பாளர்களுக்குத் தெரிவிக்கப்படும்.
திருமதி சரோஜினி பத்மநாதன் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் சமூகம், வணிகம், இசை, கலை போன்ற துறைகளில் பெண்கள் சந்தித்துள்ள சவால்கள் குறித்தும் பெண்கள் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை விளக்கியும் நான்கு சிறப்புரைகள் பெண்களால் வழங்கப்படும்.
பாடல், கவிதை, நடனம், கதை, கைவேலை, ஓவியம் போன்றவற்றைப் படைக்கும் திறமைகளைப் பெண்கள் வெளிப்படுத்தும் வகையில் அமைந்த 2 நிமிடக் காணொளியை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு https://forms.gle/WCL1hoE1eckGuSMQ6 எனும் கூகல் படிவ இணைப்பு மூலம் அனுப்பி வைக்கலாம். அனுப்பி வைக்க இறுதி நாள் மார்ச் 5ஆம் தேதி.
தெளிவான ஒளி, ஒலிக் காட்சிகளைக் கொண்ட காணொளிகளை அனுப்பவேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் காணொளிகள் நிகழ்ச்சியின்போது ஒளிபரப்பப்படும்.
பங்குபெறுவோருக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். அதோடு ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று நிலைகளுக்கான பரிசுகளோடு இரண்டு கூடுதல் சிறப்புப் பரிசுகளும் உண்டு.
திறமைகளை வெளிப்படுத்த நேரம் ஒதுக்க இயலாத பெண்கள், குறிப்பாக இல்லத்தரசிகள், தங்கள் திறமையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தர நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான அனுராதா வெங்கடேஸ்வரன் கூறினார்.
நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம்.