பல்வேறு இனிப்புவகைகளில் சேர்க்கப்பட்டு வரும் 'எரித்திரிட்டோல்' எனப்படும் இனிப்பூட்டிக்கும் ரத்தக்கட்டு, மாரடைப்பு, வாதம், மரணம் ஆகியவற்றுடன் தொடர்புள்ளதாக ஆய்வு ஒன்று கூறியுள்ளது.
ரத்தத்தில் 'எரித்திரிட்டோல்' ஆகக் குறைவான 25 விழுக்காட்டில் உள்ளவர்களைவிட ஆக அதிகமான 25 விழுக்காட்டில் உள்ளவர்களுக்கு இதயநோய் அல்லது வாதநோய் மூவாண்டுகளில் ஏற்படும் அபாயம் அல்லது அவர்கள் இறக்கும் அபாயம் இரட்டிப்பாகும் என்று ஆய்வில் தெரியவந்தது.
நீரிழிவு நோய் உள்ளிட்ட இதயநோய் காரணிகளால் மாரடைப்பு, வாதநோய் ஆகியவை ஏற்படும் அபாயத்துக்கு இது சமமானது என்று ஆய்வாளர்கள் கூறினர்.
அமெரிக்காவின் புகழ்பெற்ற கிளீவ்லண்ட் மருந்தகத்தின் ஆய்வாளர்கள் ஆய்வை மேற்கொண்டனர். ஆய்வு முடிவுகள் 'நேச்சர் மெடிசன்' ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளன.
எனினும் 'எரித்திரிட்டோல்' இனிப்பு நேரடியாக இதயநோயை ஏற்படுத்துவதாக சான்றுகள் இல்லை என்று ஆய்வாளர்கள் கூறினர். குறைவான சர்க்கரை, சர்க்கரை அற்ற அல்லது மாவுச் சத்து அல்லாத உணவு பானங்களில் 'எரித்திரிட்டோல்' சேர்க்கப்படுகிறது. அப்பொருள் களுக்கு இனிப்பும் திடமும் அளிக்க அது கேர்க்கப்பட்டு வருகிறது.
மேலும், 'எரித்திரிட்டோல்' இனிப்பால் எளிதில் ரத்தக்கட்டு ஏற்படலாம் என்றும் ஆய்வு கூறியது. ரத்தக் கட்டினால் இதயநோய், வாத நோய் ஏற்படும் அபாயம் கூடுவதாக கூறப்பட்டுள்ளது.

